பல்லுயிர்ச்சூழலின் குரலாக ஒலிக்கும் ‘ஏக்கர்ஸ்’

பல்லுயிர்ச்சூழலின் குரலாக ஒலிக்கும் ‘ஏக்கர்ஸ்’

2 mins read
1a65639c-2c57-44b4-accb-443ff3e9d7f7
சிங்கப்பூரர்களை ஒன்றிணைத்துப் பல்லுயிர்ச்சூழலைப் பற்றிக் கற்பிக்க, ‘ஏக்கர்ஸ்’,  பல்லுயிர்ச்சூழல் விழாவிற்கு ஏற்பாடு செய்தது. - படம்: ஏக்கர்ஸ்

சிங்கப்பூரின் பல்லுயிர்ச்சூழலுக்குச் செழிப்பூட்டும் உயிரினங்களைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வூட்டுவதை ‘ஏக்கர்ஸ்’ எனப்படும் விலங்குநல ஆய்வு மற்றும் கல்வி அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

அவ்வகையில், ஒவ்வோர் ஆண்டும் பல்லுயிர்ச்சூழல் விழா ஒன்றுக்கு ‘ஏக்கர்ஸ்’ ஏற்பாடு செய்து வருகிறது. சமூகத்தில் இருக்கும் பல்வேறு தரப்பினரை ஒன்றிணைத்துச் சிங்கப்பூரின் பல்லுயிர்ச்சூழலைப் பற்றிக் கற்பிப்பதில் அவ்விழா பெரும்பங்காற்றுகிறது.

தேசிய நூலகக் கட்டடத்தில் ஜூன் 6, 7ஆம் தேதிகளில் நடந்தேறிய இவ்வாண்டிற்கான விழாவில் இயற்கையைச் சார்ந்த பல தகவல்கள் பகிரப்பட்டன.

குறிப்பாக, பசைப்பொறிகள், சட்டவிரோத வனவிலங்கு வணிகம், வனவிலங்கு மீட்பு, மறுவாழ்வு ஆகிய கருப்பொருள்களை மையமாகக்கொண்டு பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

“இந்த மூன்று கருப்பொருள்களும் சிங்கப்பூர் பல்லுயிர்ச்சூழலில் உள்ள மூன்று பிரச்சினைகளாகும். அவற்றைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது,” என்றார் தலைமை நிர்வாக அதிகாரி கலைவாணன் பாலகிருஷ்ணன்.

பசைப்பொறிகள், விலங்குகளைக் கொடுரமாகக் கொல்லும் பொறிகளாகும். பசைப்பொறிகளில் சிக்கும் விலங்குகள் உடனடியாக இறப்பதில்லை; உணவின்றியும் வலியிலும் துடித்தே இறக்கின்றன.

இந்தக் கொடுமையைத் தடுக்க, ‘ஏக்கர்ஸ்’ அமைப்பும் விலங்குவதைத் தடுப்புச் சங்கமும் இணைந்து கூட்டறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன.

பொது இடங்களில் பசைப்பொறிகளை விற்பனை செய்வதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் என்று இந்த அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சிங்கப்பூர் ஒரு முக்கிய வணிக நடுவமாகத் திகழ்வதால் சட்டவிரோத வனவிலங்கு வணித்தையும் அது சாதகமாக்குகிறது. இதுபோன்று கடத்தப்படும் விலங்குகள் கொடுமைகளை அனுபவிப்பதோடு அழியும் நிலைக்கும் தள்ளப்படுகின்றன.

தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு தவிக்கும் குட்டி வனவிலங்குகளையும் காயமடைந்த பறவைகளையும் மீட்கும் பணியை ‘ஏக்கர்ஸ்’ அன்றாடம் மேற்கொண்டு வருகிறது.

பல தருணங்களில், பலர், அனுமதியின்றி வனவிலங்குகளை வீட்டிற்குக் கொண்டுசென்று அவற்றைப் பேண முயல்வதும் உண்டு. விலங்குகள் உயிர்பிழைக்கும் வாய்ப்புகளை அவை குறைக்கக்கூடும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

அதுபோன்ற சூழல்களில், ‘ஏக்கர்ஸ்’ பல உத்திகளைக் கையாண்டு அவ்விலங்குகளுக்கு மறுவாழ்வளித்து வருகிறது.

“‘ஏக்கர்ஸ்’ ஒவ்வோர் ஆண்டும் நடத்திவரும் பல்லுயிர்ச்சூழலுக்கான விழா அனைத்து வயதினருக்கும் சிங்கப்பூரின் பல்லுயிர்ச்சூழலலைப் பற்றியும் அவற்றைப் பேணிக் காக்க எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றியும் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமைக்கிறது,” என்று திரு கலைவாணன் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
ஏக்கர்ஸ்விலங்குசுற்றுச்சூழல்