சத்துணவு, எழுதுபொருள்: வசதி குறைந்த மாணவர்களுக்கு 50,000 அன்பளிப்புப் பைகள்

சத்துணவு, எழுதுபொருள்: வசதி குறைந்த மாணவர்களுக்கு 50,000 அன்பளிப்புப் பைகள்

2 mins read
9957cfa5-eb0d-45dd-9614-a848e19f4970
புரதச்சத்து உணவு, தானியங்கள், பானங்கள், தின்பண்டம் ஆகியவற்றுடன் எழுதுபொருள் தொகுப்பும் ஒரு துணிப் பையும் அன்பளிப்புப் பையில் அடங்கும். - படம்: சிங்கப்பூர் உணவு வங்கி

சிங்கப்பூர் உணவு வங்கி, பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கான ஆதரவுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. 

2026 முழுவதும் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 50,000  அன்பளிப்புப் பைகளை வழங்க இது இலக்கு கொண்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடு, பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் அத்தியாவசியத் தேவைகள் இரண்டையும் பூர்த்திசெய்ய எடுக்கப்படும் முதல் முயற்சி இது.

போதிய ஊட்டச்சத்தைப் பெறாத சிறார்களின் கவனமும் கற்றல் திறனும் நேரடியாகப் பாதிப்படைவதை சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு காட்டுகிறது.

ஒவ்வோர் அன்பளிப்புப் பையிலும் புரதச்சத்து உணவு, தானியங்கள், பானங்கள், தின்பண்டம் ஆகியவற்றுடன் எழுதுபொருள் தொகுப்பும் ஒரு துணிப் பையும் அடங்கும்.

நெஸ்லே, ஓட்சைட் போன்ற பங்காளித்துவ நிறுவனங்கள் நன்கொடை அளித்துள்ள பொருள்களும் நேரடியாக வாங்கப்பட்ட பொருள்களும் இவற்றில் அடங்கும்.

அன்பளிப்புப் பைகளின் விநியோகம் பிப்ரவரியில் தொடங்கும். பெர்த்தாபிஸ் நிலையத்துடனும் உட்லண்ட்ஸ் சமூக நிலையத்துடனும் இதற்கான ஏற்பாடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

giving.sg அமைப்பு மூலம் பொதுமக்கள் நன்கொடை அளிக்கலாம். ஃபிரேசர்ஸ் புராபர்ட்டி சிங்கப்பூர் நிறுவனம், தனது வணிக வளாகங்களில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் கண்காட்சிகளை நடத்தவுள்ளது.

சிங்கப்பூர் உணவு வங்கியின் தளவாட மேற்பார்வையாளர் ராமு சதீஷ்குமார், 35, பொருள்கள் மாறுபட்டாலும் 50,000 அன்பளிப்புப் பைகளிலும் தரமும் சத்தும் சீராக இருப்பதை உறுதிசெய்ய ஒரு நிலையான கட்டமைப்பை பயன்படுத்துவதாகத் தெரிவித்தார்.

பயனாளிகளின் வசதிக்கும் விநியோக நேரத்திற்கும் ஏற்ப, நீக்குப்போக்கான விநியோக முறை பின்பற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“நன்கொடை, கொள்முதல் மூலம் பெறப்படும் பொருள்களின் சின்னங்கள் வேறுபட்டாலும், அன்பளிப்புப் பைகளில் அவை சீராக இடம்பெற்றிருப்பது உறுதிசெய்யப்படுகிறது,” என்றார் சதீஷ்.

“இந்த அணுகுமுறை, அன்பளிப்புப் பைகளின் விநியோகத்தை திறம்படக் கையாள்வதுடன், சிறார்க்கு தேவைப்படும் நேரத்தில் அவை சென்றடைவதை உறுதிசெய்கிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்