வரவுசெலவுத் திட்டம் 2026: பெற்றோர் பார்வையில் புதிய மாற்றங்கள்

வரவுசெலவுத் திட்டம் 2026: பெற்றோர் பார்வையில் புதிய மாற்றங்கள்

2 mins read
61485fd0-2f9a-4aa4-b96c-4743a6520dc3
தமது 13 மாத ஆண் குழந்தையுடனும் கணவருடனும் நந்தினி, 30. - படம்: நந்தினி
Google News Preferred Icon

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள், சிங்கப்பூரின் வசதி குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, கல்வி, அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிப்பதற்கான மானியங்கள் குறித்து பெற்றோர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். 

அவர்களில் ஒருவரான நந்தினி, 30, கடந்த ஒன்பது மாதங்களாகத் தம் 13 மாத மகனைக் குழந்தைப் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வருகிறார். 

“குழந்தைப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிப்பது ஒரு பெரிய சவால். கணிசமான மானியங்கள் கிடைப்பது குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க பெரிதும் உதவுகிறது.”

“குறிப்பாக, குழந்தைப் பராமரிப்புக்கு இது மிகவும் அவசியம். நடுத்தர வருமானக் குடும்பமாக இருப்பதால் எங்களுக்குப் போதுமான மானியங்கள் கிடைப்பதில்லை,” என்று நந்தினி கூறினார். 

குழந்தைப் பராமரிப்பு நிலையங்களின் தற்போதைய கட்டணங்கள் கட்டுப்படியாகாத நிலையில் இருப்பதை அவர் சுட்டினார். 

குறிப்பாக, அனைத்துப் பள்ளிகளும் ஒரே மாதிரியான கட்டண வரம்புக்குள் வராதது பெற்றோர்க்குப் பெரும் சுமையாக உள்ளது. 

“தற்போது குழந்தைப் பராமரிப்புக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உள்ளன. சில பள்ளிகளில் கட்டணம் மிக அதிகம். அதோடு, இத்தகைய பள்ளிகள் அக்கம்பக்கத்திலேயே அமைந்துள்ளன.”

“சிறந்த மானியங்கள் இருந்தால் மட்டுமே குழந்தைப் பராமரிப்புக் கட்டணம் அனைவர்க்கும் கட்டுப்படியானதாக இருக்கும்,” என்று நந்தினி கூறினார்.

மானியம் அதிகரிப்பது வெறும் பொருளியல் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், தரமான கல்வியைத் தேர்வுசெய்யவும் வழிவகுக்கும் என்றார் அவர். 

கட்டணம் குறைவாக இருக்கும் பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகளுக்கான கற்றல் சூழல் பாதிக்கப்படலாம். 

சிறந்த மானியங்கள் கிடைத்தால், இல்லப் பணிப்பெண்களைச் சார்ந்திராமல், குழந்தைகளைப் பாலர் பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் முன்வருவார்கள்.

தனது 11,13 வயது மகன்களுடன் சர்ஸா மணியம், 36.
தனது 11,13 வயது மகன்களுடன் சர்ஸா மணியம், 36. - படம்: சர்ஸா மணியம்

11, 13 வயதுடைய இரு பிள்ளைகளுக்குத் தாயான சர்ஸா மணியம், 36, வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பையும் பயனீட்டுக் கட்டணங்களையும் சமாளிக்க இந்த வரவுசெலவுத் திட்டம் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து கருத்துரைத்தார்.

“இந்தத் தொகை மின்சாரம், தண்ணீர் போன்ற பயனீட்டுக் கட்டணங்கள், மளிகைப் பொருள்களுக்குச் செலவிட உதவும். இது, சிங்கப்பூரில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவும். 

“இது, ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக வழங்கப்படுவதால், அந்தந்தக் குழந்தையின் மளிகை, இதர தேவைகளுக்கேற்ப தொகையை ஒதுக்க முடியும்,” என்று அவர் கூறினார். 

இருப்பினும், இந்தச் சலுகைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே வழங்கப்படுவது குறித்த தனது கவலையையும் சர்ஸா முன்வைத்தார். 

தம் மூத்த மகனுக்கு 13 வயதாகிவிட்டதால், ஒரு குழந்தைக்கு மட்டுமே இந்தப் பலன் கிடைப்பதை அவர் சுட்டினார்.

“எனது வீட்டில் ஒரு குழந்தைக்கு மட்டுமே இதன் பலன் கிடைக்கும், ஏனெனில் மற்றொரு மகனுக்கு 13 வயது ஆகிறது.

மேற்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் அன்றாடச் செலவுகள் இருப்பதால், அவர்களுக்கும் இது நீட்டிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்,” என்று சர்ஸா மேலும் கூறினார்.

இந்த வரவுசெலவுத் திட்டம் குடும்பங்களின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் என்றாலும், இன்னும் பலதரப்பட்ட வயதினரையும் உள்ளடக்கிய விரிவான ஆதரவை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்