பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி காலமானார்

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி காலமானார்

2 mins read
f6470a4b-1fb0-4ea4-b27e-4dd11cf3b4b3
பாடகி ஜமுனா ராணி. - படம்: தட்ஸ்டமிழ்
Google News Preferred Icon

“செந்தமிழ்த் தேன்மொழியாள்”, “யாரடி நீ மோகினி” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய பழம்பெரும் பின்னணிப் பாடகி ஜமுனா ராணி, 88, காலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள அவர், வயது மூப்பு காரணமாகப் பெங்களூரில் வியாழக்கிழமை (ஜூலை 30) உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வரதராஜுலு, திரௌபதி தம்பதியினருக்கு 1938ஆம் ஆண்டு பிறந்தவர் பாடகி ஜமுனா ராணி.

அவரது தாயார் திரௌபதி சிறந்த வீணை இசைக் கலைஞராகவும், பெண்களைக் கொண்ட வாத்தியக் குழுவின் நடத்துநராகவும் இருந்தார்.

தாயாரின் வழிகாட்டலில் 7 வயதிலேயே பாடும் வாய்ப்பைப் பெற்ற அவர், சித்தூர் நாகய்யாவின் ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில் அறிமுகமானார்.

தமிழில் ‘கல்யாணி’ திரைப்படத்தில் ‘சக்ஸஸ் சக்ஸஸ், ஒன் டூ த்ரீ’ என்ற பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் ‘மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தில் “செந்தமிழ்த் தேன்மொழியாள்” பாடலை அவர் பாடினார்.

அவரது அழுத்தமான தமிழ் உச்சரிப்பிற்காகவே இப்பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் “தாரா தாரா வந்தாரா”, “காளை வயசு கட்டான சைசு”, “பாட்டொன்று கேட்டேன்” போன்ற பல பாடல்களையும் பாடி மகிழ்வித்தார்.

ஜி.ராமநாதன் இசையில் ‘உத்தம புத்திரன்’ படத்தில் டி.எம்.எஸ். மற்றும் ஜிக்கியுடன் இணைந்து “யாரடி நீ மோகினி” பாடலிலும் பாடியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் கமல்ஹாசனின் ‘நாயகன்’ திரைப்படத்தில் வரும் “நான் சிரித்தால் தீபாவளி” பாடலைப் பாடி வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றினார்.

பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வந்த அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை (ஜூலை 31) பிற்பகல் நடைபெற்றன. இசை உலகிற்குத் தீராத இழப்பை ஏற்படுத்தியுள்ள இவரது மறைவிற்குத் திரைப் பிரபலங்களும் லட்சக்கணக்கான ரசிகர்களும் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்