சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நவம்பர் 29ஆம் தேதி இரவுக்குள் புயலாக மாறும் என்றும் அது புதுவை அருகே சனிக்கிழமை (நவம்பர் 30) கரையைக் கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவையில் ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது.
காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே சனிக்கிழமை மதியம் புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வங்கக்கடலில் உருவாகி, நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக, இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள் முடங்க நேரிட்டது.
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கின.
சென்னை, வடமாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனமோட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயல் சின்னமாக வலுப்பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சென்னையில் சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்துக்கு தேசியப் பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்களும் விழுப்புரம் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா ஒரு குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

