நடிகர் அஜித் குமார், கடந்த சில மாதங்களாகப் பல்வேறு நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் தீவிரமாகப் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக, தற்போது மலேசியாவில் நடைபெற்ற ‘ஆசிய லீ மான்ஸ்’ தொடரில் அஜித்தும் அவரது அணியினரும் பங்கேற்றனர்.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே எதிர்பாராதவிதமாக அஜித்தின் கார் பழுதாகி நின்றது. இதனால் அவரால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. அஜித்தின் பந்தயத்தைக் காண ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.
இதுகுறித்து அஜித் பேசுகையில், “இதில் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. கார் பந்தயங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்புதான். இது மனத்திற்குச் சற்று வருத்தத்தைத் தந்தாலும், அடுத்த ஒரு போட்டி இருக்கிறது,” என்று மிகவும் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.
இதற்கிடையே, இந்தப் போட்டியைக் காணச் சென்றிருந்த நடிகை ஸ்ரீலீலா, அஜித்தைச் சந்தித்துப் பேசினார். மேலும், அவருடன் ‘செல்ஃபி’ எடுத்துக்கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

