குடும்பம், வேலை, நண்பர்கள், படிப்பு, பொழுதுபோக்கு என நம் முன்னால் ஏராளமான வாய்ப்புகள் இருக்கும். நாம் எதைத் தேர்வு செய்கிறோம் என்பதைப் பொறுத்து நமது வெற்றி மாறுபடும் என்று சொல்கிறார் நடிகை மம்தா மோகன்தாஸ்.
“திரையுலகைப் பொறுத்தவரை வெற்றி என்பது முன்னணி நடிகை என்பதோ, நல்ல பெயரும் புகழும் பணமும் சம்பாதிப்பதோ அல்ல.
“ஒருவரது வேலை அவருக்கு மனநிறைவு கொடுத்தால் அதுவே வெற்றி. அந்த வெற்றி எனக்கு கிட்டியுள்ளது,” என்கிறார் நடிகை மம்தா மோகன்தாஸ்.
மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ், தமிழில் விஷால் ஜோடியாக ‘சிவப்பதிகாரம்’ படத்தில் நடித்துப் பிரபலமானார்.
தொடர்ந்து ‘தடையற தாக்க’, ‘எனிமி’ உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இடைப்பட்ட காலத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சினிமாவிலிருந்து சற்று விலகியிருந்தார்.
தற்போது மீண்டும் தனது இரண்டாம்கட்ட திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளவர், விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்குப் பிடித்தமான நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். அவரது தனித்துவமான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்.
தொடர்புடைய செய்திகள்
“தனது பாத்திரத்துக்காக சிரமம் பாராமல் நடிப்பார். நாயகன் என்பதற்காக எல்லா காட்சிகளிலும் தானே நடிக்கவேண்டும் என்ற மனநிலை இல்லாதவர்.
“வில்லன் பாத்திரங்களிலும் அவர் துணிச்சலாக நடிக்கிறார். அது அவ்வளவு சுலபமல்ல.
“ஒரு நாயகனாக நடிப்பதற்கு எந்தளவுக்கு உடல் தகுதி வேண்டுமோ அதே அளவுக்கு வில்லனாக நடிப்பதற்கும் உடல்தகுதி தேவை,” என்றும் மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.
‘சீதக்காதி’யில் கமல் சாருக்கு இணையான நடிப்பைக் கொடுத்திருந்தார். பாரதிராஜா சாருடன் நடித்தது தனக்கு மறக்கமுடியாத அனுபவமாக இருந்ததாகவும் சொல்கிறார்.
சிலர் நடிப்பதற்கான வாய்ப்பை நிராகரித்திருப்பார்கள். அது அவர்கள் எடுத்த முடிவு. அந்த முடிவு அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம் என்பவர், நடிகையாக வேண்டும் என்பது எனது முடிவு. அந்த நல்ல முடிவை எடுத்ததற்காக என்னை நானே பாராட்டிக்கொள்கிறேன் என்கிறார்.
பொதுவாக வாழ்க்கை அவ்வளவு சுலபமானது அல்ல என்று சொல்வார்கள். அதை நானும் என் வாழ்க்கையில் உணர்ந்துள்ளேன்.
2009ல் நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டது முதல் இன்றுவரை தினம்தினம் உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டுள்ளேன். அந்தவகையில் தினம்தினம் தவமிருந்ததால்தான் வெற்றி எனக்கு சாத்தியமாகி உள்ளது என்று சொல்கிறார் மம்தா மோகன்தாஸ்.
“அமெரிக்காவில் ஏழெட்டு ஆண்டுகள் இருந்தேன். எந்தத் துணையும் இல்லாமல், யாரையும் சார்ந்திராமல் முற்றிலும் புதிய இடத்தில் இருந்தேன். என்னுடைய மருத்துவக் காரணங்களுக்காக இப்படித் தனியாகச் சென்று தங்கினேன்.
“அந்த நேரத்தில்தான் எனது பலம், பலவீனத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் நான் புரிந்துகொண்ட விஷயங்களும் யாரையும் சார்ந்திடாமல் சுதந்திரமாகச் செயல்படக் கற்றுக்கொண்டதும் மிகவும் நல்ல விஷயங்களாக தோன்றியது.
“இங்கிருக்கும்போது நடிகை என்பதால் எனக்குப் பலரும் உதவிக்கரம் நீட்ட தயாராக இருந்தார்கள். ஆனால், அங்கு அப்படியல்ல, யாருக்கும் என்னைத் தெரியாது. ஒரு பால் பாக்கெட் வாங்குவதாக இருந்தாலும் நான்தான் போகவேண்டும்.
“எனது விருப்பப்படியே படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். பள்ளிப் பருவம் முடிந்த கையோடு நடிக்க வந்தேன். அப்போது எனக்கு 20 வயசு. இப்போது அருள்நிதியுடன் ‘மைடியர் சிஸ்டர்’ என்ற படம் பண்ணுகிறேன்,” என்கிறார்.
சமந்தா, ஃபகத் பாசில், நான் உட்பட உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதைத்தான் சொல்ல வருகிறோம். ஒவ்வொருவரும் தங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனிக்கவேண்டும். நாம் நோய் அதிகமுள்ள சமுதாயத்தில் வாழ்கிறோம். ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருகிறோமா என்பதை சில நிமிடங்களாவது ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார் மம்தா.

