ஓடிடி தளங்கள் ஆதிக்கம்; கொதிக்கும் திரையுலகம்

ஓடிடி தளங்கள் ஆதிக்கம்; கொதிக்கும் திரையுலகம்

3 mins read
03195043-be7c-41ce-b945-a226113b5b2c
விக்ரம். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் அண்மைக்காலமாக ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பலர் புலம்பத் தொடங்கி உள்ளனர்.

கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிட்டு ஒரு படத்தை உருவாக்கிய பின்னர், அதன் வெளியீட்டை ஓடிடி நிறுவனங்கள்தான் முடிவு செய்கின்றன என்றும் அந்நிறுவனங்களைச் சார்ந்துதான் அனைத்து வியாபார நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வேண்டியுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

பத்து கோடி ரூபாயில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது எனில், அதில் கணிசமான தொகையைக் கொடுத்து ஓடிடி நிறுவனம் அப்படத்தை வாங்குகிறது.

இதனால் திரையரங்க வெளியீட்டுக்கு முன்பே, தமக்கு நஷ்டம் ஏற்படாது என்று தயாரிப்பாளர் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.

“ஆனால் இங்குதான் சிக்கல் முளைக்கிறது. ஏனெனில் பல்வேறு படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கும்போது, எந்தெந்த படங்கள் முதலில் வெளியாக வேண்டும் என்பதை ஓடிடி நிறுவனங்கள்தான் மறைமுகமாகத் தீர்மானிக்கின்றன.

“இதனால் தங்களுடைய படம் சிறப்பாக உருவாகி இருந்தாலும், அதை உரிய, தாம் நினைத்த நேரத்தில் வெளியிட முடியாமல் தயாரிப்பாளரின் கைகள் கட்டப்படுகின்றன.

இதையடுத்து ஓடிடி நிறுவனங்களின் இத்தகைய ‘ஆதிக்க’ செயல்பாடுகளை கோடம்பாக்கத்துப் பிரமுகர்கள் வெளிப்படையாக கண்டிக்கத் தொடங்கி உள்ளனர்.

நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளரும் இயக்குநருமான பா.ரஞ்சித், இது குறித்த வேதனைகளைப் பொதுமேடையிலேயே போட்டுடைத்தார்.

மேலும், ஓடிடி ஒப்பந்தங்கள் அமையும் முன்னரே படங்களை வெளியிடவும் செய்தார். அண்மையில் ‘Jபேபி’ படத்தையும் அப்படித்தான் வெளியிட்டார் ரஞ்சித்.

அவரையடுத்து தாம் நடித்த படங்களையும் ஓடிடி ஒப்பந்தங்களுக்காகக் காத்திருக்காமல் துணிச்சலாக வெளியிட முன்வந்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.

அவருடைய நடிப்பிலும் தயாரிப்பிலும் உருவாகும் ‘ரோமியோ’ படம் ஓடிடி ஒப்பந்தத்துக்கு முன்னரே வெளியாகிறது.

பா.ரஞ்சித்தின் வெளிப்படையான நடவடிக்கைகளால் அவர் இயக்கி உள்ள ‘தங்கலான்’ படத்தின் வியாபாரம் பாதிக்கப்படக்கூடும் என திரையுலக நண்பர்கள் பலரும் அறிவுறுத்தினராம். எனினும் ‘யாரேனும் ஒருவர் பூனைக்கு மணிகட்டித்தான் ஆகவேண்டும்’ என்ற முனைப்புடன் குரலெழுப்பி உள்ளார் ரஞ்சித்.

இதற்கிடையே, ‘தங்கலான்’ பட வெளியீடு பலமுறை தள்ளிப் போனதற்கு இதுதான் காரணமா என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக விக்ரம் ரசிகர்கள் ஓடிடி நிறுவனங்களை வசைபாடுவது அதிகரித்துள்ளது.

ஆனால், இதுபோன்ற விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தி உள்ளாராம் விக்ரம்.

எவ்வளவு சிக்கல்கள் எழுந்தாலும் ‘தங்கலான்’ நிச்சயம் வெற்றி பெறும் என்றும் யாராலும் படத்தின் வெளியீட்டை தடுக்க இயலாது என்றும் சொல்லி, விக்ரம் தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களின் படங்களும் தற்போது ஓடிடி தளங்களில் வெளியீடு காண்கிறது.

திரையரங்குக்குச் செல்ல முடியாத சூழலில், ஏராளமான ரசிகர்கள் ஓடிடி தளத்தில் புதுப்படங்களைப் பார்த்துவிடுகின்றனர்.

அந்த வகையில், விஜய்யின் லியோ, ரஜினியின் ஜெயிலர் போன்ற படங்கள் பெருந்தொகைக்கு விற்கப்பட்டு, ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

இந்நிலையில், பெரிய நடிகர்களின் படங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஓடிடி நிறுவனங்கள் முயற்சி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, திரையரங்கில் முதலில் வெளியாகும் புதுப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்