‘படைத்தலைவன்’ படப்பிடிப்பில் சண்முக பாண்டியனைத் தேடித் தவித்த யானை

‘படைத்தலைவன்’ படப்பிடிப்பில் சண்முக பாண்டியனைத் தேடித் தவித்த யானை

2 mins read
e5a7555e-0403-41a9-a7b5-c40811eafc06
‘படைத்தலைவன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் சண்முக பாண்டியன். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அதிரடி சண்டைக்காட்சிகளில் நடிக்கும்போது தனது தந்தையை நினைவூட்டுகிறார் சண்முக பாண்டியன் என்று இயக்குநர் அன்பு கூறுகிறார்.

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இரு மகன்களில் ஒருவரான சண்முக பாண்டியன் இப்போது அன்பு இயக்கத்தில் ‘படைத்தலைவன்’ என்ற தலைப்பில் உருவாகும் புதுப் படத்தில் நடித்து வருகிறார்.

குறிப்பிட்ட ஒரு காட்சியில் யானைகளுக்கு இடையே நின்று சண்டை போட வேண்டும் என்றாராம் இயக்குநர். மிகவும் ஆபத்தான காட்சி அமைப்பு என்றாலும் எந்தவித தயக்கமும் அச்சமும் இன்றி நடித்து முடித்துள்ளார் கேப்டனின் வாரிசான சண்முக பாண்டியன்.

“காடும் அதைச் சார்ந்த இடமும்தான் இப்படத்தின் கதைக்களம். இந்த உலகத்தில் நம்பிக்கைத் தரக்கூடிய பல்வேறு அம்சங்கள் உள்ளன. வனம் போன்ற அதிசயம் வேறு கிடையாது. இதைப் படத்தில் விவரித்துள்ளோம்.

“ஒரு யானைக்கும் கதாநாயகனுக்கும் இடையே உள்ள அன்பான உறவை விவரிக்கிறது இந்தப் படம். தான் நேசித்த ஒரு விலங்குக்காக எத்தகைய தூரத்துக்கும் செல்வான் நாயகன். எதைச் செய்யவும் அவன் தயங்க மாட்டான்.

“ஒரு பிரச்சினையைத் தீர்க்க பல விதங்களில் இறங்கிப்போராட வேண்டும். ஒரு சாமானியனால் அவ்வாறு செய்ய முடியவில்லை எனில் தானே ஒரு படைத்தலைவன் போல் களத்தில் இறங்கிப் போராடுவதுதான் தீர்வாக இருக்கும். அப்படிப்பட்ட போராட்டத்தை எதிர்கொள்ளும் படைத்தலைவன்தான் என் கதாநாயகன்,” என்கிறார் இயக்குநர் அன்பு.

சண்முக பாண்டியனை தாம் எப்போதுமே உற்று கவனித்து வந்ததாக ஊடகப் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘படைத்தலைவன்’ கதையும் கூட அவரை மனதில் நிறுத்தித்தான் எழுதப்பட்டது என்றும் தாம் விவரித்த கதையை மிக ஆத்மார்த்தமாக சண்முக பாண்டியன் கேட்டுக் கொண்டார் என்றும் சொல்கிறார்.

கதை கேட்டு, நடிக்க ஒப்புக்கொண்ட அடுத்த நாளே தன் உடல் எடையை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளத் தயாராகிவிட்டாராம் சண்முக பாண்டியன். படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்ட யானையிடமும் நெருங்கிப் பழக தொடங்கி விட்டாராம்.

“அந்த யானையும் சண்முக பாண்டியன் மீது பாசம் காட்டத் தொடங்கி விட்டது. படப்பிடிப்பு அரங்கில் அவர் இல்லை என்றால் தேடத் தொடங்கி விடும். அதைக்கண்டு அனைவரும் வியந்தோம்.

“இருவரும் அருகருகே நிற்கும்போது சண்முக பாண்டியனுடன் யானை மிகுந்த பிரியத்துடன் விளையாடுவதைப் பார்க்க அழகாக இருக்கும்.

“திட்டம் போட்டுச் செயல்படுவதால் மட்டும் யானையின் அன்பை பெற்றுவிட முடியாது. உண்மையான அன்புக்குத்தான் அது தலை வணங்கும். அப்படி இந்த யானையை தன்னுடைய அன்பால் கட்டிப் போட்டார் சண்முக பாண்டியன் என்கிறார் இயக்குநர் அன்பு.

இப்படத்துக்கான பெரும்பாலான காட்சிகள் காட்டுப்பகுதியில்தான் படமாக்கப்பட்டுள்ளதாம். தமிழகத்தின் பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து ஒடிசா மாநிலம் வரை சென்று படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

“இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜயகாந்தின் மகன் என அறிந்த போது அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது. எனவே கூடுதலாக மெனக்கெட்டார்,” என்கிறார் இயக்குநர் அன்பு.

குறிப்புச் சொற்கள்