களையிழந்து காணப்பட்ட சென்னை அனைத்துலக திரைப்பட விழா

களையிழந்து காணப்பட்ட சென்னை அனைத்துலக திரைப்பட விழா

2 mins read
0e20655e-ff5f-480b-898b-347d72c7346c
அனைத்துலக திரைப்படவிழா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

21வது சென்னை அனைத்துலக திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்களோ, அமைச்சர்களோ கலந்துகொள்ளாததால் களையிழந்து காணப்பட்டது.

சென்னை திரைப்பட விழா என்றாலே சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கலை நிகழ்ச்சி, முன்னணி நட்சத்திரங்களின் வருகை என கோலாகலமாக இருக்கும். ஆனால் அண்மைகாலமாக அந்த நிலை மாறி மிகச் சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

அதிலும், இந்த ஆண்டு 21வது சென்னை அனைத்துலக திரைப்பட விழா எந்தவித முன்னேற்பாடுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் தொடங்கியது. இம்முறை தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள்கூட விழாவில் கலந்துகொள்ளவில்லை. மேலும் அரசு சார்பிலும் யாரும் பங்கேற்கவில்லை.

அதே நேரத்தில் புனே, கேரளா ஆகிய இடங்களில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்படுகிறது.

அண்மையில் கேரளாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கமல்ஹாசன், மம்முட்டி என சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்றனர். இந்நிலையில், சென்னை அனைத்துலக திரைப்பட விழாவில் மோகன்ராஜா, யூகி சேது, பார்வதி நாயர் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் 85 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னணி நட்சத்திரங்களோ, அமைச்சர்களோ கலந்து கொள்ளாததற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், மழையுமே காரணம் என விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எது எப்படி இருந்தாலும் திரைப்படத்துறையில் ஆர்வம் கொண்டவர்கள், இந்த விழாவை எதிர்நோக்கி இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு சரியான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

பல குழப்பங்களுடன் மிகச்சாதாரணமாக துவங்கியுள்ள இந்த 21வது சென்னை அனைத்துலக திரைப்பட விழாவில் ‘விடுதலை’, ‘மாமம்மன்’, ‘போர்தொழில்’, ‘அயோத்தி’, ‘அநீதி’ உள்ளிட்ட 12 தமிழ்ப் படங்களும் அனைத்துலக அளவில் 57 நாடுகளில் இருந்து 126 படங்களும் திரையிடப்படவுள்ளன.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி