நிமிர்ந்து நிற்கும் நிமிஷா

நிமிர்ந்து நிற்கும் நிமிஷா

2 mins read
8be55b30-739a-41ed-b822-5f5c3cb96f34
நிமிஷா சஜயன். - படம்: ஊடகம்
multi-img1 of 2
Google News Preferred Icon

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து 2 படங்களில் அற்புதமான நடிப்பை கொடுத்து ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி உள்ளார் நிமிஷா சஜயன்.

நாயகிக்கு உண்டான அனைத்து இலக்கணங்களையும் சுக்குநூறாக உடைத்து சாதாரண பெண்களும் நிஜத்தில் நாயகிகள் தான் எனபதற்கு உதாரணமாக மாறி வருகிறார்.

தமிழ் சினிமாவில் சரிதா முதல் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை எத்தனையோ கறுப்பு நிற கட்டழகிகள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் அண்மைய இணைப்பாக கிடைக்கிற வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி வரும் இவர் நாயகி என்றால் ஒல்லியாக இருக்கவேண்டும், சிவப்பு நிறத்துடன் இருக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைத்து இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 2 படங்களில் தனது முத்திரையை பதித்துள்ளார்.

இவருக்கு 26 வயதுதான் ஆகிறது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு நடிப்பில் அப்படியொரு முதிர்ச்சியை சிறப்பாக வெளிப்படுத்தி அதிசயிக்க வைக்கிறார்.

சினிமாவில் இருந்த ஆர்வம் இவருக்கு 2017ல் மலையாளத்தில் வெளியான ‘கேர் ஆஃப் சாய்ரா பானு’ எனும் படத்தில் மஞ்சு வாரியர், அமலா அக்கினேனி உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.

2021ஆம் ஆண்டு ஜோ பேபி இயக்கத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தில் இவரது யதார்த்தமான நடிப்பைப் பார்த்து பலரும் ஆடிப்போனார்கள்.

மலையாளத்தில் அண்மையில் வெற்றி பெற்ற ‘நயாட்டு’, பகத் ஃபாசில் நடித்த ‘மாலிக்’, ‘ஒரு தெக்கன் தள்ளு கேஸ்’, ‘துறைமுகம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார்.

அப்படிப்பட்ட இவரை துணிச்சலுடன் இந்த ஆண்டு கோலிவுட்டுக்கு அருண்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் அழைத்து வந்தனர்.

சித்தார்த் தயாரித்து நடித்த ‘சித்தா’ படத்தில் துப்புரவுத் தொழிலாளியாகவும் சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணாகவும் இவர் நடித்திருப்பார்.

“அங்கிருந்து இங்கு வருவதற்குள் எத்தனை ஆண்கள் என்னை முறைத்துப் பார்த்தார்கள் என்று தெரியுமா?” என அவர் பேசும் ஒற்றை வசனம் ஆண் சமூகத்திற்கு எதிராக சுழற்றப்பட்ட சாட்டையடியாகவே விழுந்தது.

‘சித்தா’ படத்தைத் தொடர்ந்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடிப்பில் மிரட்டி இருப்பார்.

மலைவாழ் பெண்ணாகவும் கர்ப்பமான பெண்ணாகவும் நடித்து இறுதியில் கணவனுடன் சேர்ந்து சாவை எதிர் நோக்கும் நேரத்தில் தப்பு அடிக்கிற காட்சியில் படம் பார்ப்பவர்களை எல்லாம் கலங்க வைத்திருப்பார்.

நல்ல படங்களை இயக்கும் இயக்குநர்கள் இவரை இன்னும் சற்று அதிகமாக பயன்படுத்தலாம். இந்த ஆண்டு நடிப்பில் நிமிர்ந்து நிற்கிறார் நிமிஷா சஜயன்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்