பாலியல் தொந்தரவை மறுத்த நித்யா மேனன்

பாலியல் தொந்தரவை மறுத்த நித்யா மேனன்

3 mins read
1044c582-0248-434a-a1bc-094e5279e66e
நித்யா மேனன் - படம்: ஊடகம்
Google News Preferred Icon
நித்யா மேனன்
நித்யா மேனன் - படம்: ஊடகம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என 50க்கும் மேற்பட்ட பல மொழிப் படங்களில் நடித்தவர் நித்யா மேனன்.

தென்னிந்தியாவின் பன்முகத் திறமைபெற்ற நடிகைகளுள் ஒருவராக அசத்தி வரும் நித்யா, எந்த பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதனுடன் கனகச்சிதமாகப் பொருந்தக் கூடியவர்.

சிறந்த பாடகியாகவும் உள்ள இவர் அண்மையில் அளித்திருந்த பேட்டியில், “தெலுங்குப்பட உலகம் மிகவும் பாதுகாப்பானது, ஆனால், தமிழ்ப் பட நாயகன் ஒருவர் என்னிடம் அத்துமீறினார். தெலுங்குத் திரையுலகில் எவ்வித பிரச்சினையையும் அனுபவித்திராத நான் தமிழ்த் திரையுலகில் பலவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டேன்.

“ஒரு தமிழ் நடிகர் படப்பிடிப்புத் தளத்தில் பலமுறை எனக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுத்தார்,” என்று அவர் கூறியதாக தகவல் பரவியது.

இதையறிந்த தமிழ் ரசிகர்கள் மட்டுமன்றி தெலுங்கு ரசிகர்களும் நித்யா மேனனுக்கு தொந்தரவு கொடுத்த நடிகர் யார் என அறிந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.

நித்யா மேனன் உண்மையிலேயே இதுபோல் கூறியிருந்தாரா? என்பது குறித்த கேள்விக்கு, “தவறான செய்தி! முற்றிலும் பொய்! நான் இதுபோன்ற ஒரு பேட்டியைக் கொடுக்கவே இல்லை.

“மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற தவறான செய்திகளைப் பதிவிடுபவர்கள் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இப்போது ஃபிலிம் ட்ரேட் டிரேக்கரான ஏபி ஜார்ஜ் என்பவர், நித்யா மேனனுடன் பேசிய ‘வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்’ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில் தனது தமிழ் சக நடிகர்களுக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று நித்யா மேனன் தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவரது பதிவில், “ஊடகத்தின் சில பிரிவுகள் இதுபோன்று மோசமான செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. நான் உங்களிடம் ஒன்றை மட்டும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன், இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதில் கவனமாக இருங்கள், தயவு செய்து மனிதத் தன்மையுடன் செயல்படுங்கள்,” என்று நித்யா மேனன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சற்று நேரம் கழித்து மீண்டும் ஒரு பதிவை வெளியிட்ட நித்யா மேனன், அந்த வதந்தியை பரவவிட்டவர் யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

@BuzZ Basket என்ற எக்ஸ் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டிருக்கும் பதிவில், “குறுகிய நேரம்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். ஆனால் அந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதன் மூலம் இதுபோன்ற மோசமான நடத்தையை தடுத்து நிறுத்தமுடியும் என்பதால் இதை நான் சுட்டிக்காட்டுகிறேன்.

“@ursBuzzBasket, @letscinema ஆகிய தளங்களைப் பின்தொடர்ந்து பதிவிட்ட அனைவரும் சிறந்த மனிதர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவர்களை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றியையும் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே, தற்போது ‘மர்டர் மிஸ்டரி’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக ஸ்விட்சர்லாந்தில் தங்கியுள்ள நித்யா மேனன், விஜய் போன்ற நடிகர்களுடன் நடிப்பது மிகவும் சுலபம் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘குமாரி ஸ்ரீமதி’ வெப்தொடர் இன்று 28ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகிறது.

விஜய்யுடன் இணைந்து ‘மெர்சல்’ படத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன். இந்தப் படத்தில் அவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி மிகவும் சிறப்பாக அமைந்தது.

இந்நிலையில், நடிகர் விஜய் மிகவும் அமைதியான நடிகர் என்று பாராட்டு தெரிவித்துள்ள நித்யா மேனன், படப்பிடிப்பில் மற்றவர்கள் வேலைகளில் அவர் அதிகமாக தலையிட மாட்டார் என்று கூறியுள்ளார். விஜய் அமைதியான நடிகர் என்றும் பாராட்டியுள்ளார் நித்யா மேனன்.

இதனிடையே, தமிழில் ஜெமினி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கிரண். அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானதும் இந்திக்கு சென்றேன். அங்கு வரவேற்பு இல்லாததால் மீண்டும் சென்னைக்கே வந்து செட்டில் ஆனேன். சினிமாவில் எனக்கு நிறைய கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன.

“பட வாய்ப்பு அளிக்க தவறாக என்னை நடத்த முயன்றனர். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு, உடனடியாக அந்தப் படத்தில் இருந்து வெளியே வந்து விடுவேன்.

“நடிப்பை விட்டு விலகி ஏதாவது வியாபாரம் செய்யலாமா? என்றும் நினைத்தேன். நான்கு ஆண்டுகள் வரை ஒருவரை காதலித்து பிறகு அவர் நல்லவர் இல்லை என்று தெரிந்ததும் காதலை முறித்துக்கொண்டேன். இப்போது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படவாய்ப்புகளும் வருகின்றன. தற்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லை,’’ என்று கூறியுள்ளார் கிரண் பேடி.

குறிப்புச் சொற்கள்