சென்னையில் களைகட்டிய ‘ஜவான்’ பட விழா

சென்னையில் களைகட்டிய ‘ஜவான்’ பட விழா

3 mins read
fa9a212d-c256-4b68-a315-b6a18277f52a
நயன்தாரா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதி, அட்லீ, யோகி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகி நயன்தாரா கேரளாவில் இருப்பதாகவும் தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், நிகழ்ச்சியில் பேசிய பட நாயகன் ஷாரூக்கான், வசீகர நயன்தாரா என்று குறிப்பிட்டுப் பாராட்டியது நயன்தாரா ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

அதேபோல் அட்லீயும் நயன்தாராவை வெகுவாகப் பாராட்டினார். ‘ஜவான்’ கதையை தயார் செய்ததும் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கியதும், முதலில் மனதில் தோன்றியது நயன்தாராவின் முகம்தான் என்றார்.

மேலும், ‘ஜவான்’ படத்தை தாம் இயக்கியதற்கு நடிகர் விஜய்தான் முக்கியமான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“விஜய் அண்ணாதான் இந்தப் படத்துக்காக என்னை வெகுவாக ஊக்கப்படுத்தினார். எது நடந்தாலும் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள் என்றும் நிறைய எதிர்மறை கருத்துகள் வரும் என்றும் கூறினார்.

“விஜய் அண்ணா கூறியதுபோல் எதிர்மறையான அம்சங்களை நாம் அறவே கண்டுகொள்ளக் கூடாது. அவற்றைப் புறக்கணித்துவிட்டு நம் போக்கில் செல்ல வேண்டும்.

“கொரோனா நெருக்கடி காரணமாக ‘ஜவான்’ படத்தை உருவாக்க தாமதமாகிவிட்டது. நான் விஜய் ரசிகன் என்பதால் என்றைக்குமே கொடுத்த வாக்கை மீறியது கிடையாது.

“நான் உறுதியளித்தபடி, இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. இசை உலகில் தவிர்க்க முடியாதவர் அனிருத். அவரை ஒரு இந்திப் பாடலுக்கு மட்டும் பயன்படுத்தலாமா என்று ஷாரூக்கானிடம் கேட்டபோது ஒரு பாடலுக்கு மட்டுமல்ல, மொத்த படத்துக்கும் அவரே இசையமைக்கட்டும் என்றார்.

“நான் வெற்றி பெறலாம் அல்லது தோற்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு உயர்த்த எப்போதும் பாடுபடுவேன்,” என்றார் அட்லீ.

இதையடுத்து பேசிய விஜய் சேதுபதி, அரங்கில் கலகலப்பூட்டினார். ஷாரூக்கானை தாம் காத்திருந்து பழிவாங்கியதாகவும் குறிப்பிட்டார்.

“நான் சிறு வயதில் ஒரு மார்வாடிப் பெண்ணைக் காதலித்தேன். ஆனால், அந்தப் பெண்ணோ ஷாரூக்கானை காதலிப்பதாக கூறினார். அவருக்காக ஷாரூக்கானை பழிவாங்கத் திட்டமிட்டேன். ஆனால், அதற்கு இத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

“இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அவர், என்னை நல்ல நடிகன் என்று சொன்னபோது அதிர்ந்து போனேன். அவரது நடிப்பையும் பணியாற்றும் விதத்தையும் வெகுவாக மதிக்கிறேன். தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன்,” என்று இந்தப் படத்தில் தாம் வில்லனாக நடிப்பதை மறைமுகமாக குறிப்பிட்டார் விஜய் சேதுபதி.

ஷாரூக்கான் பேசுகையில், தாம் விஜய் சேதுபதியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

இதுவரை தாம் நடித்த திரைப்படங்களுக்காக ஒரு நிகழ்ச்சியும்கூட சென்னையில் நடைபெறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

“விஜய் சேதுபதி என்னை திரையில் பழிவாங்கலாம். ஆனால் என்னை விரும்பும் ரசிகைகளை அவரால் அபகரிக்க முடியாது.

“அனிருத் என் மகனைப் போன்றவர். ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலில் இருந்து அவரைக் கவனித்து வருகிறேன். அவரை ‘வித்தைக்காரன்’ அனிருத் என்றுதான் குறிப்பிடுவேன்,” என்றார் ஷாரூக்கான்.

மேலும், அட்லீயை ‘மரண மாஸ்’ என்றும் ‘அட்டகாசமான’ விஜய் சேதுபதி என்றும் குறிப்பிட்டார். அவர் இவ்வாறு குறிப்பிட்டபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் நன்றி தெரிவித்தார்.

“இந்தப் படத்துக்காக இந்தி கற்றுகொள்வது சற்று கடினமாகத்தான் இருந்தது. விஜய் சேதுபதிக்கும் எனக்கும் இடையேயான உடல்மொழி சிறப்பாக இருப்பதாக இயக்குநர் பாராட்டினார். மிகச்சிறந்த படைப்பாக இப்படம் உருவாகி உள்ளது,” என்றார் யோகிபாபு.

இந்த நிகழ்ச்சியில் நேரில் வந்து பங்கேற்க முடியாவிட்டாலும், காணொளிப் பதிவு மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார் நடிகர் கமல்ஹாசன்.

வரும் 7ஆம் தேதி இப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியீடு காண உள்ளது.

குறிப்புச் சொற்கள்