அர்ப்பணிப்புடன் நடித்த ஆலியா பட்

அர்ப்பணிப்புடன் நடித்த ஆலியா பட்

2 mins read
1beb49fa-cb8f-4d88-bec5-2ee957d8bb0e
நடிகை ஆலியா பட்டும் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். - படம்: ஏஃப்பி
Google News Preferred Icon

என்னதான் கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும், ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இந்தி கதாநாயகிகளுக்கு உள்ளது.

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் ஏற்கெனவே ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளனர். தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகை ஆலியா பட்டும் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். அதிலும் முதல் படத்திலேயே மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

ஹாலிவுட் முன்னணி நடிகையான கால் கடோட்டின் புதுப்படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஆலியா பட்தான் முதன்மை வில்லி. இந்தப் படம் தொடர்பாக அவ்வப்போது வெளியான காணொளிகளும் புகைப் படங்களும் ஆலியாவுக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளன.

இதனால் அவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாகத் தகவல்.

இதற்கு முன்பு ராஜமௌலி இயக்கத்தில் நடிப்பதன் மூலம் இந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக வலம்வர முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் ஆலியா. ஆனால் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

தாம் நடித்த பல முக்கியமான காட்சிகளை படத்தொகுப்பின்போது நீக்கிவிட்டதால் ராஜமெளலி மீது அவர் கோபத்தில் இருப்பதாக செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டபோது, ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு ஆலியா பட் வாழ்த்துக்கூட தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார் ஆலியா. அதிலும் சிறிய கதாபாத்திரமாக அல்லாமல் படம் முழுவதும் வரும் வில்லி பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதிலும், இப்படத்துக்கான படப்பிடிப்பின்போது ஆலியா தாய்மை அடைந்திருந்தார். இருப்பினும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்ததாக ஹாலிவுட் படக்குழுவினர் பாராட்டி உள்ளனர். மேலும் புது வாய்ப்புகள் கிடைக்கவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்