ஒரு காலத்தில் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் சந்தனக்கடத்தல் வீரப்பன் தொடர்பாக ஏதேனும் பரபரப்பான செய்திகள் வெளியான வண்ணம் இருக்கும்.
அவர் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதும் வீரப்பனின் கூட்டாளிகள் சிறையில் அடைக்கப்பட்டதும் தனிக்கதை.
இந்நிலையில் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ளது 'மாவீரன் பிள்ளை' திரைப்படம்.
கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் கே.என்.ஆர் ராஜா என்பவர் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் இது.
இதில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி திரையுலகில் அடி எடுத்து வைத்துள்ளார். நடிகர் ராதாரவி தெருக்கூத்துக் கலைஞராக நடித்துள்ளார்.
இப்படம் மிக விரைவில் திரைகாண உள்ள நிலையில், படத்தில் நடித்தது தொடர்பான தமது அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் வீரப்பன் மகள் விஜயலட்சுமி.
"அப்பாவின் மறைவுக்குப் பிறகு பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டோம். இப்போது ஓரளவுக்கு நன்றாக இருக்கிறோம்.
"எனினும், இந்த வார்த்தைகளைச் சொல்ல பல ஆண்டுகள் தொடர் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இன்று ஓரளவு அமைதியான வாழ்க்கையை வாழ முடிகிறது.
"ஒரு கட்டத்தில் நமக்கு அடிப்படைக் கல்வி கூட கிடைக்குமா என்ற சந்தேகம்கூகட இருந்தது. என்னையும் என் சகோதரியையும் நல்லவிதமாக வளர்த்து ஆளாக்கி உள்ளார் அம்மா. அதற்காக அவர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல," என்று தனது தாயார் குறித்து நெகிழ்ந்துபோகிறார் விஜயலட்சுமி.
இவர் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளாராம். திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான் விஜயலட்சுமியின் லட்சியமாம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
"அம்மா சமூகம், அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இப்போது நானும் அவருடன் இணைந்துள்ளேன்.
"சிறு வயதிலேயே திரைத்துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதில் அம்மா கவனமாக இருந்தார்.
"நம் சமூகத்தில் ஒரு பக்கம் மதுவால் மக்கள் சீரழிகின்றனர். இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுகிறார்கள். இப்படி சமூகத்தில் உள்ள சிக்கல்களை அலசும் படம் இது. சமூகத்தில் நிலவும் அநியாயங்களை எதிர்த்து நிற்கும் பெண்ணாக நடித்துள்ளேன்.
"ஒற்றை மனுசியாக எங்களைக் கரை சேர்க்க அம்மா மிகவும் சிரமப்பட்டார்," என்கிறார் விஜயலட்சுமி.

