தேசிய விருது பெற்ற மகிழ்ச்சி மனதில் நிறைந்திருந்தாலும் அதுகுறித்து அலட்டிக்கொள்ளாமல் தனக்கே உரிய அமைதியுடனும் பக்குவத்துடனும் பேசுகிறார் இசை அமைப்பாளர் டி. இமான்.
'அண்ணாத்த' படத்துக்காக ஏற்கெனவே நான்கு பாடல்களுக்கு இசையமைத்து முடித்த நிலையில் மீதமுள்ள பாடல்களை முடித்துத் தருமாறு இயக்குநர் தரப்பில் கேட்டுள்ளனராம். அந்தப் பணியில் இப்போது மூழ்கியுள்ளார்.
"நல்ல பாடல்களை உருவாக்குவதற்கான நேரம் வந்துள்ளது. அத்தகைய பாடல்களுக்கு நல்ல தளம் அமைத்துக் கொடுப்பதுதான் என் வேலை.
"முன்பு போல பாடல் காட்சிகளைத் தவிர்த்துவிட்டு ரசிகர்களை எழுந்து போகவிடக்கூடாது. முந்தைய காட்சிக்கும் பாடல்களுக்கும் இடையே ஒருவித பிணைப்பை ஏற்படுத்தும் பொறுப்பான வேலை இசையமைப்பாளரிடம் ஒப்படைக்கப்படுகிறது. எனவே கவனமாக இருக்க வேண்டும்," என்று பொறுப்புடன் பேசுகிறார் இமான்.
'விஸ்வாசம்' படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் நிச்சயம் வெற்றி பெறும் என்று நடிகர் அஜித் தொடக்கத்திலேயே கூறினாராம். அவரது கணிப்பு பொய்யாகவில்லை என்று சொல்லும் இமான், துள்ளல் இசை, மெல்லிசை என்று எந்தவகைப் பாடலாக இருந்தாலும் அது வலுவானதாக இருக்கவேண்டும் என்கிறார்.
"'மயிலாஞ்சி', 'ஒங்கூடவே பிறக்கணும்' போன்ற பாடல்கள் இலகுவாக காதில் தேன் பாய்வது போன்று அமைந்துள்ளன. ஆனால் குத்துப் பாடலிலும் அதேபோன்ற தன்மையைக் கொண்டுவர வேண்டும். அதுதான் இசையமைப்பாளராக எனக்குள்ள சவால்.
"'காந்தக் கண்ணழகி' போன்ற ஒரு குத்துப்பாடலை எத்தனை ஆண்டுகள் கழித்துக் கேட்டாலும் சலிக்காமல் இருக்கவேண்டும். இதையெல்லாம் மனதார உணர்ந்துதான் மெட்டமைக்கிறேன்.
"வெறும் மெட்டைப் பாடிக் கேட்கும்போதே இனிமையாக இருக்கவேண்டும். அது முக்கியம். இறைவன் என்மீது அன்புடன் இருக்கிறார். அந்தப் பேரன்பை அவர் எனது பாடல்களின்மீது தூவிச் செல்வதால் அவை வெற்றி பெறுவதாக நினைப்பேன். அவ்வளவுதான் முடியும். வேறு எதுவும் நம் கையில் இல்லை," என்கிறார் இமான்.
'கண்ணான கண்ணே' போன்ற உறவுப் பாடல்களுக்கு நிறைய முன்னுதாரணங்கள் இருப்பதாகக் குறிப்பிடுபவர், இத்தகைய பாடல்கள் அழியாத ரகமாக பல காலம் நீடிக்கவேண்டும் என விரும்புவாராம்.
"இந்தப் பாடலைக் கேட்ட உடனேயே அஜித் சார் சற்றே உணர்ச்சி வசப்பட்டு, 'நம் படத்தில் ஒரு நல்ல பாடல் காலாகாலத்துக்கும் நிலைத்திருப்பது போன்று அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டார். 'கண்ணான கண்ணே' பாடல் 'விஸ்வாசம்' படத்துக்குப் பெரிய முகவரியாக மாறும் என்பது அவருக்கு முன்பே தெரிந்திருக்கிறது," என்று சொல்லும் இமான், தாமும் ஒரு தந்தை என்பதால் அந்தப் பாடலுக்காக மனமொன்றி மெட்டமைத்ததாக கூறுகிறார்.
"ஒரு நல்ல பாடல் வெற்றிபெற வேண்டும் எனும் கட்டாயம் கிடையாது. அதேபோல் வெற்றி பெறும் பாடல் நல்ல பாடலாக இருக்க வேண்டும் எனும் அவசியமும் கிடையாது. இதை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளேன்," என்கிறார் இமான்.

