ரவுடியாக நடிக்கும் சித்தார்த்

ரவுடியாக நடிக்கும் சித்தார்த்

3 mins read
1b2f94b6-017a-4ef3-9714-b82face1a604
சித்தார்த். - படம்: ஊடகம்
Google News Preferred Icon

இன்றைய நவீன உலகில் எல்லாமே வணிகமயமாகிவிட்டது. ஆட்டோவுக்கென தனி செயலி. வாடகைக் கார்களுக்கென தனி செயலி என்று எல்லாமே செயலி, கணினிமயமாகிவிட்டது.

இன்றைய தேதியில் வர்த்தக பெரு நிறுவனங்களில் காலெடுத்து வைக்காத துறைகள் என்று ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் யோசிக்கும் போதுதான் ‘ரௌடி&கோ’ கதை மனத்தில் உருவானதாகச் சொல்கிறார் கார்த்திக்.

அதாவது, யாரும் மாட்டிக்கொள்ளாத வகையில் ஒரு குற்றத்தைக் கட்டுக்கோப்பாக, திட்டமிட்டுச் செய்வதற்கு ஒரு நிறுவனம் இருந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கதைக்கருவாம்.

நம் எதிரி யார் என்று சொன்னால் போதும். அவர்களை நாம் சொல்வதுபோல் தீர்த்துக் கட்டிவிடுவார்கள். இதுதான் அந்த ரௌடி நிறுவனத்தின் வேலை. இந்த நிறுவனத்தில் வேலையில் சேர்கிறார் சித்தார்த். அதன் பின்னர் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவரிடம் ரௌடி&கோ முதலாளி யோகி பாபுவும் அவரது குழுவினரும் சிக்கிக்கொண்டு திண்டாடுவது, இடையே சித்தார்த், நாயகி ராஷி கண்ணா ஆகிய இருவருக்குமான காதல் என்று கதை நகர்கிறது.

சித்தார்த்துடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் ராஷி கண்ணா.

“நான் இயக்கிய ‘டக்கர்’ படத்தில் யோகி பாபுவும் இருந்தார். அப்போது ஏற்பட்ட நட்பு நீடிக்கிறது. இந்தப் படத்திலும் அவர் இருக்கிறார்.

“சித்தார்த்திடம் சில விஷயங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் முரண்டு பிடிக்கக்கூடியவர் என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால், அது தவறு என்பது அவருடன் நன்கு பழகியவருக்குத் தெரியும். மிகவும் மேன்மையானவர்.

“படப்பிடிப்புக்கு அவர் இத்தனை மணிக்கு வந்தால் நல்லது என்று நான் விரும்பினால், அவரே வந்து நிற்பார். அதேபோல் நானும் அந்த நேரத்துக்கு வந்துவிட வேண்டும் என எதிர்பார்ப்பார்.

“இயக்குநர் மீது முழு நம்பிக்கை வந்துவிட்டால் போதும். பிறகு நாம் என்ன சொன்னாலும் மறுப்பு சொல்லாமல் செய்துவிடுவார். இந்தப் படத்தில் துறுதுறு உடல்மொழியுடன் நகைச்சுவையும் காதலும் கலந்த கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்துள்ளார். அதேபோல் உணர்வுபூர்வமான காட்சிகளில் உருக வைத்துள்ளார்.

“இதுவரை சித்தார்த்தை இப்படியொரு கதாபாத்திரத்தில் யாரும் பார்த்திருக்க முடியாது. அதனால் தனிப்பட்ட வகையில் கூடுதலாக உழைத்து, மெனக்கெட்டுள்ளார்,” என்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ்.

இப்படத்தின் இறுதிக்காட்சியில் 500 ரவுடிகள் பங்கேற்கும் சண்டை இருக்கிறதாம். இதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிகளை அருமையாக உருவாக்கி உள்ளனர். இந்த சண்டைக் காட்சி பேரளவில் பேசப்படும் என்று படக்குழு அடித்துச் சொல்கிறது.

படத்தின் முக்கியமான காட்சிகளைச் சென்னையில் படமாக்கி உள்ளனர்.

“இந்தப் படத்தில் ‘ராஷி கண்ணா ஆடை வடிவமைப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுக்கு வழியில் சென்று எதை வேண்டுமானாலும் அடைந்துவிடலாம் என்று நினைக்கும் பாத்திரம். யாராவது விபத்தில் சிக்கியிருந்தால்கூட அவர்களைக் காப்பாற்றாமல், ‘ரீல்ஸ்’ எடுத்து ‘இன்ஸ்டா’வில் தட்டிவிடும் கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

“இத்தனைக்கும் தொலைபேசியில்தான் முழுக் கதையையும் விவரித்தேன். சித்தார்த்தான் கதாநாயகன் என்றதும் உடனே நடிக்க சம்மதித்துவிட்டார்.

“ராஷி கண்ணாவைப் பொறுத்தவரை நேர்மையானவர். உண்மையாக உழைக்கக் கூடியவர். இயக்குநருக்கு என்ன தேவை என்பதை எளிதில் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடித்து அசத்துகிறார். அவர் சித்தார்த்துடன் இணைந்து இந்தப் படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்,” என்கிறார் இயக்குநர் கார்த்திக் ஜி க்ரிஷ்.

குறிப்புச் சொற்கள்