வரவிருக்கும் பொங்கல் பண்டிகை சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக அமையப்போகிறது.
தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள நான்கு மெகா பட்ஜெட் திரைப்படங்கள் பொங்கல் சமயத்தில் களமிறங்கவுள்ளன.
பொங்கல் கொண்டாட்டத்தின் தொடக்கமாக, ஜனவரி 9ஆம் தேதி இரண்டு மிகப்பெரிய படங்கள் மோதுகின்றன.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ராஜா சாப்’ திரைப்படங்கள் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகின்றன.
அனில் ரவிப்புடி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள படம் ‘மன சங்கர வரப்பிரசாத் காரு’.
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவும் கௌரவ தோற்றத்தில் வெங்கடேஷும் நடித்துள்ளனர். கேத்தரின் தெரசா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகாது என வதந்திகள் பரவின. ஆனால், அதனை மறுத்துள்ள சிரஞ்சீவி, ஜனவரி 12ஆம் தேதி படம் வெளியாவது உறுதி என அறிவித்துள்ளார்.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம், பொங்கல் தினமான ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது.
இதில் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘பராசக்தி’ ஆகியவை நேரடித் தமிழ்ப் படங்களாகவும் ‘தி ராஜா சாப்’ மற்றும் ‘மன சங்கர வரப்பிரசாத் காரு’ ஆகியவை தெலுங்குத் திரைப்படங்களாகவும் இருந்தாலும், பான் இந்தியா படங்களாக பல மொழிகளில் வெளியாகின்றன.
இந்த மெகா பட்ஜெட் படங்களுக்கு இடையே சில சிறு பட்ஜெட் படங்களும் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆக மொத்தம், இந்த முறை பொங்கல் கொண்டாட்டத்தின்போது அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

