‘மை டியர் சிஸ்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அருள்நிதி. தன்னை மிகவும் பாதித்த ஒரு கதையைப் படமாக்கி இருப்பதாகச் சொல்கிறார் இப்படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம்.
“ஆணாதிக்கம் நிறைந்த தம்பிக்கும் பெண்ணியச் சிந்தனையைக் கொண்ட அக்காவுக்கும் இடையே நடக்கும் போராட்டம். இதை அதி தீவிரமாக சொல்லாமல் சற்றே நகைச்சுவை கலந்து கூற முற்பட்டுள்ளேன்.
“இருவரும் ஒருவரையொருவர் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதை இந்தப் படம் விவரிக்கும். பாசமான சகோதரி இல்லாதவர்கள், ‘நமக்கு இப்படி ஒரு சகோதரி இல்லையே’ என்று ஏங்குவார்கள்,” என்கிறார் பிரபு ஜெயராம்.
தாம் சிறு வயது முதல், பத்திரமாகச் சேமித்து வைத்திருந்த இளமைக்கால நினைவுகள் அனைத்தையும் திரைப்படமாக மாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், மிகுந்த நம்பிக்கைகளுடன், காதலுடன் அன்பு வழிந்து திரியும் ஒரு குடும்பத்தின் பதிவு இது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் ஏற்கெனவே பேர் எடுத்த ‘பாசமலர்’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற உடன்பிறந்தவர்கள் பாசத்தைப் பதிவு செய்யும் படைப்புகளில் இதுவும் ஒன்றாக அமையும் என்கிறார் பிரபு ஜெயராம்.
அருள்நிதி குறித்து?
“தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பை, முதிர்ச்சியை மெருகேற்றி உள்ளன. பிறர் சொல்வதற்கு முன்பே அவர் தன்னைத்தானே சரிசெய்துகொள்கிறார். விமர்சனங்களை வரவேற்கிறார்.
“பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவருக்கான வேடம் நிச்சயம் புதிதாக இருக்கும். பாண்டியராஜின் ‘வம்சம்’ படத்துக்குப் பிறகு ஒரு குடும்பச் சித்திரத்தில் அருள்நிதி இன்னும் நடிக்கவில்லை. அந்தக் குறையை இந்தப்படம் போக்கும். தனது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்துள்ளார். அவரது வழக்கமான நடிப்பைவிட இது வித்தியாசமாக இருக்கும்.”
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படத்துக்கு மம்தா மோகன்தாசின் நடிப்பு பெரும் பலமாக இருந்துள்ளது. நிஜமான அக்கா, தம்பி எப்படி இருப்பார்கள் என்று நினைக்கிறோமோ அப்படிப்பட்டவர்களைத்தான் நான் தேடினேன்.
“அடிக்கடி சண்டை போடும் அக்கா, தம்பி, ஒரு பிரச்சினை என்றால் முதலில் ஓடி வருவார்கள். அந்த வகையில் இந்தப் படம் அற்புதமான அக்கா, தம்பி உறவாக கனிந்திருக்கிறது.
“அருள்நிதி ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். ஷாம், அருண் பாண்டியன், பாலாஜி சக்திவேல், எம்.எஸ். பாஸ்கரின் அக்கா ஹேமமாலினி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் வருகின்றனர்,” என்று கூறியுள்ளார் பிரபு ஜெயராம்.

