தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நட்டம் மற்றும் திரையரங்குகளின் வீழ்ச்சியைக் கருத்தில் கொண்டு, “இனி வரும் காலங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகே ஓடிடி (OTT) தளங்களில் வெளியிட வேண்டும்,” என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்ரமணியம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் விரிவாகப் பேசியபோது, “தமிழகத்தில் மொத்தம் 1,168 திரையரங்குகள் உள்ளன. இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் திரையரங்குக் கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. இருப்பினும், தற்போது 60 விழுக்காட்டு திரையரங்குகள் நஷ்டத்தில்தான் இயங்கி வருகின்றன.
“இதற்கு முக்கியக் காரணம், புதிய படங்கள் வெளியாகி நான்கு வாரங்களிலேயே ஓடிடி தளங்களில் வருவதுதான். இதனால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. பல திரையரங்குகள் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
“திரையரங்குகளைக் காப்பாற்ற, தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். அதன்படி, இனி புதிய படங்களைத் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்குப் பிறகுதான் ஓடிடி-யில் வெளியிட வேண்டும்.
“இந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொள்ளும் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களை மட்டுமே திரையரங்குகளில் வெளியிடுவோம். இதற்கு மறுப்பவர்களின் படங்களைத் திரையிட மாட்டோம்.
“தற்போது பெரிய நடிகர்கள் ரூ.25 கோடி முதல் ரூ. 150 கோடி வரையும், அதற்கு மேலாகவும் சம்பளம் கேட்கின்றனர். நடிகர்களின் சம்பளம் ஒருபுறம் இருக்க, அவர்களுடன் வரும் உதவியாளர்களுக்கான செலவும் தயாரிப்பாளர்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது. “சொந்தக் காரில் வரும் சில நடிகர், நடிகையர் அதற்கான பெட்ரோல் செலவையும் தயாரிப்பாளர்களிடமே வசூலிக்கின்றனர்.
“முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சினிமாவில் மும்முரமாக நடித்துக்கொண்டு இருந்தபோது, அவருக்குப் பாதுகாப்பாகக் குண்டு கருப்பையா, குண்டு மணி போன்றோர் வருவார்கள். அவர்களுக்கு எம்.ஜி.ஆர்தான் சம்பளம் கொடுப்பார். ஆனால், இன்றைய நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு, இந்தச் சிறிய செலவுகளைக்கூடத் தயாரிப்பாளர்கள் தலையில் கட்டுவது நியாயமல்ல.
“பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களை வாழ வைத்தால் மட்டுமே சினிமா துறை பிழைக்க முடியும்,” என்று சுப்ரமணியம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

