கதைதான் கதாநாயகன்: பாவனா

கதைதான் கதாநாயகன்: பாவனா

2 mins read
26aa565a-b2f0-4927-9aa0-04609e7cb268
பாவனா. - படம்: நியூஸ் மலையாளம்
Google News Preferred Icon

மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ‘அனுமி’ திரைப்படம்.

நடிகை பாவனா இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒரு துப்பறியும் கதையை அறிவியல் பின்னணியுடன் அழகாகக் காட்சிப்படுத்தி உள்ளதாக அறிமுக இயக்குநர் ரியாசைப் பாராட்டுகிறார் பாவனா.

தமிழிலும் மார்ச் 6ஆம் தேதி இப்படம் வெளியாகியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவுடன் கலந்துகொண்டார் பாவனா.

“தமிழில் நடிக்கக்கூடாது என்று நான் முடிவு செய்துவிட்டேனா என்று கேட்கிறார்கள். அப்படியொரு எண்ணமே இல்லை. நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்,” என்றார் பாவனா.

‘அனுமி’ படத்தின் கதை, திரைக்கதை தம்மை வெகுவாகக் கவர்ந்துவிட்டதால், அதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு வழக்கைத் துப்பறியும் உண்மையான கால அவகாசத்தைக் கருத்தில்கொண்டு எதார்த்தமான முறையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் நடிகர் ரகுமான் முக்கியப் புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளார்.

பாதிப் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தயாரிப்பில் யாரும் எதிர்பாராத வகையில் சிக்கல் ஏற்பட்டதாம்.

இதனால் பாவனாவும் இணைத்தயாரிப்பாளராக சேர முடியுமா என்று கேட்டபோது, அதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளின் தரத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட நம்பிக்கையால் பணத்தை முதலீடு செய்தாராம் பாவனா.

“இனி ஒரு படத்தில் நாயகன், நாயகி, வில்லன் என்ற பழைய முக்கோணக் கதையெல்லாம் மறைந்துவிட்டது. கதைதான் அனைத்துமாக இருக்கும். கதைதான் கதாநாயகன்,” என்று குறிப்பிட்ட பாவனா, இனி நல்ல கதை என்று தெரிந்தால் அதைத் திரைப்படமாகத் தயாரிக்கத் தயங்கப்போவதில்லை என்றார்.

பெண்களை முன்னிலைப்படுத்தும் கதை என்பதற்காகத் தன்னைத் தேடிவரும் வாய்ப்புகளைக் கண்மூடித்தனமாக ஏற்பதில்லை என்றும் அதே நேரம் நல்ல கதை அமைந்தால் யார் நாயகன், நாயகி என்றெல்லாம் யோசிக்காமல் ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

“இந்தப் படத்துக்குக் கேரள ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு, தமிழக ரசிகர்களிடமும் கிடைக்கும் என நம்புகிறேன்.

“நானே திட்டமிட்டு ஒரு காதல் கதைப் படத்தில் நடிக்க முடியாது. ஒரு சிறந்த இயக்குநர் நல்ல காதல் கதையுடன் வந்தால் கண்டிப்பாக மீண்டும் தமிழ் ரசிகர்களுக்காக அத்தகைய படங்களில் நடிப்பேன்,” என்றார் பாவனா.

தற்போது கன்னடப் படங்களில் கவனம் செலுத்திவரும் இவர், கதை பிடித்திருந்தால் சம்பள விஷயத்தில் கறார் காட்டுவதில்லை. படப்பிடிப்பின்போது முழுக் கவனத்தையும் படத்தில் மட்டுமே செலுத்துவார் என்று இயக்குநர்கள் பாவனாவைப் பாராட்டுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்மலையாளம்இயக்குநர்கதை