என் மனைவி ஆர்த்தி எங்கள் வீட்டு பவுனம்மா: சிவகார்த்திகேயன்

என் மனைவி ஆர்த்தி எங்கள் வீட்டு பவுனம்மா: சிவகார்த்திகேயன்

2 mins read
311cb10d-8bf5-4c75-bda2-0ea66b03ddaa
மனைவி ஆர்த்தியுடன் சிவகார்த்திகேயன். - படம்: விகடன்
Google News Preferred Icon

மனைவி சொல்லே மந்திரம் என்பர். சிவகார்த்திகேயன் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை எனலாம்.

மனைவியின் துணையின்றி தம்மால் ஒரு நடிகராகவும் வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வளர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்து கடந்த மாதம் வெளியான ‘தாய் கிழவி’ படம் வசூல் ரீதியில் அசத்தியது.

தயாரிப்பாளர் என்ற முறையில், சிவாவுக்குப் பலகோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இப்படத்தின் இயக்குநரான சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார் சிவா.

இந்நிலையில் ‘தாய் கிழவி’ படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசியபோதே தனது மனைவியின் அருமை பெருமைகள் குறித்து சிலாகித்துக்கொண்டார் சிவகார்த்திகேயன்.

தங்களுக்குத் திருமணமான நாளில் இருந்து மனைவி ஆர்த்திதான் வீட்டின் வரவு செலவு கணக்குகளை கவனித்து வருகிறார் என்றும் தமது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதுகூட தமக்குத் தெரியாது என்றும் குறிப்பிட்டார் சிவா.

“ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால்கூட செலவுக்குப் பணம் கொடு என்று ஆர்த்தியிடம்தான் கேட்பேன். அவர் கொடுப்பதை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் வாங்கிக்கொள்வேன். அவர் சில பொறுப்புகளை ஏற்காவிட்டால் நான் தயாரிப்பாளராக உயர்ந்திருக்க முடியாது.

“இந்தப் படத்தைப் பார்த்தபோது ஆர்த்தி என் கண்களுக்கு இன்னொரு பவுனுத்தாயாக காட்சியளித்தார்,” என்றார் சிவகார்த்திகேயன்.

‘தாய் கிழவி’ படத்தின் லாபத்தில் அதன் கதாநாயகியான ராதிகாவுக்கு குறிப்பிட்ட விழுக்காடு பங்கு அளிக்கப்படும் என்று கூறினாராம் சிவகார்த்திகேயன்.

இதை வெற்றி விழா மேடையில் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டினார் ராதிகா.

“எனக்குப் பேசிய சம்பளத்தை முறையாகக் கொடுத்துவிட்டனர். அதையும் மீறி இப்படி ஒரு தொகையைக் கொடுப்பார்கள் என்பதை சற்றுகூட எதிர்பார்க்கவில்லை.

“பெண்களுக்குச் சம உரிமை என்று பேச்சளவில் கூறுவோர் மத்தியில், இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இவ்வாறு செய்திருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.

“பணத்துக்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. திரையுலகில் இதற்கு முன்பு ஒரு நடிகைக்கு இதுபோன்ற பெருமை கிடைத்திருக்கிறதா என்பது தெரியாது. ஆனால், எனக்குக் கிடைத்திருப்பதை நினைத்து ஒரு பெண்ணாக, நடிகையாகப் பெருமைப்படுகிறேன்,” என்று ராதிகா மேடையில் பேசினார்.

குறிப்புச் சொற்கள்