‘மாடலிங்’ துறையே அதிக சவாலானது: ருக்மணி வசந்த்

‘மாடலிங்’ துறையே அதிக சவாலானது: ருக்மணி வசந்த்

1 mins read
e01a2b18-9b60-4b7e-8d94-1e28ae56fc68
ருக்மணி வசந்த். - படம்: பின்டர்ரஸ்ட்
Google News Preferred Icon

கன்னடத் திரையுலகில் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ள ருக்மணி வசந்த், மாடலிங், திரையுலக நடிப்பு குறித்த தனது சுவாரசியமான பார்வையைப் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா சேப்டர் 1’ திரைப்படத்தின் மூலம் ‘பான் இந்தியா’ அளவில் பெரும் புகழ்பெற்ற ருக்மணி வசந்த், நடிகர் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஜூனியர் என்டிஆருடன் ஒரு புதுப்படத்தில் இணைந்துள்ளார்.

தமிழிலும் இரண்டு பெரிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது வெற்றிப் பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ள அவர், திரையுலக நடிப்பைவிட ‘மாடலிங்’ துறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதுதான் அதிக சவாலானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

“நடிகர்களுக்கு ஒரு பெரிய வசதி இருக்கிறது. ‘பஞ்ச்’ வசனங்கள் பேசியோ, அதிரடி சண்டைக் காட்சிகளில் நடித்தோ, பாடல் காட்சிகளின் மூலமோ ஒரு கதையை நகர்த்திவிடலாம்.

“ஆனால், ‘மாடலிங்’ அப்படிப்பட்டது அல்ல. அங்கே ஒரு வார்த்தைகூட பேசமுடியாது. உங்கள் கண்கள், முகபாவனையால் மட்டுமே ஒரு கருத்தையோ உணர்ச்சியையோ பார்வையாளர்களுக்குக் காட்டவேண்டும். இதுதான் ‘மாடலிங்’ துறையில் இருக்கும் மிகப்பெரிய சவால். இது மிகவும் கடினமான கலை.

“மாடலிங் துறையில் தான் கற்றுக்கொண்ட இந்த நுணுக்கங்கள் தன்னை ஒரு சிறந்த நடிகையாக மெருகேற்ற உதவியுள்ளது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ருக்மணியின் இந்த முதிர்ச்சியான கருத்துகளை அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்நடிகைதிரைச்செய்திதிரைப்படம்