மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து, ‘பான் இந்தியா’ நடிகையாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன்.
கேரளாவைச் சேர்ந்த அவர், மலையாளத் திரையுலகில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.யு.மோகனின் மகள்.
2013ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம்போலே’ படத்தின் மூலம் அவர் நடிகையாக அறிமுகமானார்.
தொடர்ந்து, கன்னடத்தில் ‘நானு மட்டு வரலட்சுமி’, இந்தியில் ‘பியாண்ட் தி கிளொய்ட்ஸ்’ ஆகிய படங்களில் நடித்தார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழில் நடிகையானார். பின்னர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தங்கலான்’ படத்தில் ஆராத்தி கதாபாத்திரத்தில் மிரட்டியிருந்தார்.
மாளவிகா நடிப்பில் ‘சர்தார் 2’ திரைப்படம் விரைவில் திரைகாணவுள்ளது.
இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் பிற மொழிகளில் நடிப்பவர்களுக்கு இருக்கும் சவால் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் பரவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“எந்த மொழியில் உங்களுக்கு ஆளுமை இருக்கிறதோ அந்த மொழிப் படங்களைத் தேர்வுசெய்து நடிப்பது சிறப்பு. நான் மலையாளம் பேசுவேன். ‘ஹ்ரிதயபூர்வம்’ படத்தில் புனேயில் பிறந்து, வளர்ந்த மலையாளி பாத்திரம். எனவே எனது பாத்திரத்துக்கு என் நகரத்து மலையாளம் மிகப் பொருத்தமாக இருந்தது,” என மாளவிகா கூறினார்.
“நான் தெலுங்குப் படங்களில் நடிக்கும்போது, எனக்கு அம்மொழி சற்று சவாலாக இருந்தது. வசனங்களை என்னால் பிற மொழிகளில் உடனடியாகக் கற்றுக்கொண்டு பேச முடியாது. திடீர் என்று வசனத்தை மாற்றியமைத்தால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவிப்பேன்,” என அவர் தெரிவித்தார்.
கதாபாத்திரத்தின் உணர்ச்சி, காட்சியின் தன்மை இவற்றை எல்லாம் மறந்துபோய், அந்த வார்த்தைக்கு அடுத்து என்ன வரும் என்பதே மனதில் ஓடும் எனக் குறிப்பிட்ட அவர், அப்படியான வேளைகளில் மிக மோசமான ஒன்றைச் செய்கிறோம் என்பதைத் தெரிந்துகொண்டே அதைச் செய்துவிடுகிறோம் என்றார்.
இந்த நெருக்கடிகளைச் சமாளிக்க சில நடிகைகள், சுலபமான வழிகளைப் பின்பற்றுவதாகவும் தெலுங்கு, தமிழில் நடிக்கும் சில நடிகைகள் வசனங்களையே பார்ப்பதில்லை எனவும் அவர் கூறினார்.
“அந்தக் காட்சிக்கான உணர்ச்சியை மட்டும் படக்குழுவிடம் கேட்டுக்கொள்ளும் அவர்கள், சோகமான காட்சிகளுக்கு அதற்கான முகபாவனையை மட்டும் கொடுத்துவிட்டு 1,2,3,4ஐ சோகமாகச் சொல்வார்கள். அதுவே கோபமான காட்சி என்றால், கோபமான முகபாவனையைக் கொடுத்துவிட்டு ஏ,பி,சி,டிஐ கோபமாகச் சொல்வார்கள்,” என மாளவிகா சொன்னார்.
அதையும், ஒலிச் சேர்க்கைக்கு (டப்பிங்) தகுந்தவாறு பேசுகின்றனர் என்றும் இப்படியே தங்கள் மொத்த திரையுலகப் பயணத்தையும் சமாளித்து விடுகின்றனர் என்றும் அவர் பேசியிருக்கிறார்.
இதற்கிடையே, அவர் நடிகை நயன்தாராவைத்தான் குறை கூறுகிறார் எனச் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, ஒரு நேர்காணலில் நயன்தாராவின் நடிப்பு குறித்து மாளவிகா மறைமுகமாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

