புதிதாகப் பிறந்ததாக உணர்கிறேன்: மதுபாலா

புதிதாகப் பிறந்ததாக உணர்கிறேன்: மதுபாலா

2 mins read
214d93d7-5ff2-498f-9234-ad8ed512ba41
‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி. - படம்: விகடன்
Google News Preferred Icon

மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் ஒலித்த ‘காதல் ரோஜாவே’ என்ற பாடலைக் கேட்கும்போது, அதில் நடித்த கதாநாயகி மதுபாலாவின் நினைவு வராமல் போகாது.

கே. பாலசந்தரின் ‘அழகன்’, சங்கரின் ‘ஜென்டில்மேன்’ என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்த மதுபாலா, திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டுவிலகினார்.

இந்நிலையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் தமிழ், மலையாளத்தில் வெளியாகியிருக்கும் ‘சின்ன சின்ன ஆசை’ படத்தில் மலையாள நடிகர் இந்திரனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

“ரோஜா’ படத்திற்குப் பிறகு எனக்கு மனநிறைவு தந்த படமென்றால் அது ‘சின்ன சின்ன ஆசை’தான். அறிமுக இயக்குநர் என்றாலும் வர்ஷா தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டார்.

“நான் மூத்த நடிகை. திரு இந்திரன் என்னைவிட மூத்த நடிகர். ஆனாலும், இயக்குநர் வர்ஷா அவ்வப்போது எங்களை வழிநடத்தியபடியே இருந்தார்.

“அவருக்கு இதுதான் முதல் படம். எத்தனையோ வெற்றிப் படங்களில் நடித்துவிட்ட என்னை வழிநடத்துகிறாரே என்று சில நேரங்களில் நினைத்திருக்கிறேன். ஆனால், அவற்றையெல்லாம் வர்ஷா ஒரு பொருட்டாகக் கருதவில்லை‌.

“தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள், தன் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப திரையில் வெளிப்பட வேண்டும் என்பதில்தான் அவரது முழுக் கவனமும் இருந்தது. அதனால்தான் நான் நடித்துள்ள லீலா கதாபாத்திரமும் இந்திரன் நடித்த மாதவன் வேடமும் பிரமாதமாக அமைந்துள்ளன.

“35 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட படத்தில் நடித்திருப்பது புதிதாகப் பிறந்தது போன்ற உணர்வையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது,” என்று கூறியுள்ளார் மதுபாலா.

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த வேளையில்தான் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் மனத்தில் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் இருந்து விலகியபோது சிறிதும் வருத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமணம் செய்துகொண்டதாகவும் குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர் அவர்களின் 10 வயது வரை அருகேயிருந்து கவனித்துக் கொண்டதாகவும் மதுபாலா பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“தாய்மை எனும் அனுபவத்தைப் பெறவேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆர்வமிருந்தது. குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களின் ஒவ்வொரு அசைவையும் அருகேயிருந்து கவனித்து ரசித்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் நான் வழக்கமான இல்லத்தரசி என்பது புரிந்தது. எனக்கு சமைக்கத் தெரியாது. மற்றவர்கள் உதவியோடுதான் குடும்பம் நடத்தியிருக்கிறேன்.

“நடிப்பு, நடனம், சினிமா ஆகியவைதான் எனது இயல்பான அம்சங்களாக இருந்தன. வாழ்வின் எந்தக் கட்டத்திலும் நான் நடிகைதான் என்று என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

“இப்போது நடிப்பின்மீது மீண்டும் ஆர்வம் பிறந்திருக்கிறது. காலம் எனக்கு நல்ல வாய்ப்புகளைத் தருமென நம்புகிறேன்,” என்று சொல்லும் மதுபாலாவுக்கு, ரஜினியுடனும் தமிழக முதல்வர் விஜய்யுடனும் இணைந்து நடிக்கவேண்டும் என்பதுதான் ஆசையாம்.

குறிப்புச் சொற்கள்
நடிகைமலையாளம்திரைப்படம்திருமணம்