பெரிய மாற்றங்களுக்காகக் காத்திருக்கிறேன்: பிரியா வெங்கட்

பெரிய மாற்றங்களுக்காகக் காத்திருக்கிறேன்: பிரியா வெங்கட்

2 mins read
602dfb37-dfb0-48bb-a002-4d8db0b21170
பிரியா வெங்கட். - படம்: கெத்து சினிமா
Google News Preferred Icon

‘லாக் டவுன்’, ‘டோர்’, ‘பாம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் பிரியா வெங்கட்.

மூன்று படங்களும் பெரிதாக பேசப்படவில்லை. எனினும், தனக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடி வருவதாகச் சொல்கிறார் பிரியா.

“நான் நடித்த மூன்று பட வாய்ப்புகளுமே என்னைத் தேடி வந்தவைதான். எந்த வகையிலும் நான் முயற்சி செய்யவில்லை. என்னைப் போன்றவர்கள் எந்த அளவுக்கு நடிப்போம் என்பதை இயக்குநர்கள் எளிதில் கணித்துவிடுவார்கள். எனவே அவர்களாகத் தேடி வந்து தரக்கூடிய வாய்ப்புகள்தான் எனக்கு ஒத்துவரும்.

“சில இணையத்தொடர்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு நானும் சிலரை அணுகி இருக்கிறேன். ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை. பலரால் வேண்டாம் என ஒதுக்கப்படும் தொடர்களும் திரைப்படங்களும்தான் என்னைத் தேடி வருகின்றன. எனினும் இதையும்கூட எனது அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன்,” என்கிறார் பிரியா வெங்கட்.

இவருக்கு தெய்வ நம்பிக்கை மிக அதிகமாம். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்குள்ள பிரபலமான கோவில்களுக்கு ஒருமுறை சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

தனது கைப்பையில் தன் பாட்டியின் ‘பர்ஸ்’ ஒன்றை வைத்துள்ளார். அதற்குள் ராமர், சீதை, அனுமான் ஆகிய மூவரும் உள்ள படம் காணப்படுகிறது.

“கூடவே பிரத்தியங்கரா தேவி படமும் வைத்துள்ளேன். இந்த தெய்வங்கள்தான் என்னைத் தீய சக்திகளிடம் இருந்து பாதுகாக்கின்றன.

“என் கைப்பையில் என் தாயாரின் படமும் உள்ளது. அப்பா படத்தை என் கைப்பேசியில் வைத்துள்ளேன்,” என்கிறார் பிரியா வெங்கட்.

திரைப்பட நடிகையாக தாம் உருவாக அதிர்ஷ்டம்தான் காரணம் என்பதைத் தம்மால் ஏற்க முடியாது என்று சொல்பவர், தனது வளர்ச்சிக்கு கடும் உழைப்பும் முக்கியமான காரணம் என்கிறார்.

“நான் நடிக்க வந்த புதிதில் பல நடிப்புத் தேர்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். பல தேர்வுகளில் முதல் சுற்றிலேயே வெளியேறிய அனுபவம் உண்டு.

“சில வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறிய வேடங்களிலும் நடித்து இன்று இந்த இடத்துக்கு வந்துள்ளேன். ‘லாக் டவுன்’ படம் வெளியான பிறகு என் திரை வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என நம்புகிறேன்,” என்கிறார் பிரியா வெங்கட்.

“நான் பெரிய கடவுள் பக்தை என்று சொல்வதை ஏற்க மாட்டேன். அதே சமயம் ஆன்மிகத்தில் நம்பிக்கை உண்டு. நல்ல விஷயங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நிச்சயம் நடக்கும். ஆனால் அதில் சற்று தாமதம் ஏற்படலாம்.

“காரணம் அந்த தாமதம்தான் நாம் எதற்காக வேண்டிக்கொண்டோமோ அதன் மதிப்பை நமக்கு உணர்த்தும். ‘லாக் டவுன்’ படம் விரைவில் வெளியாக வேண்டுமென கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அந்தப் படம் வெளியானது,” என்கிறார் பிரியா வெங்கட்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்இயக்குநர்