‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்பு துவக்கம்

‘தத் த்வம் அஸி’ படப்பிடிப்பு துவக்கம்

2 mins read
25583c6d-332c-42f1-91d0-8400fd745f2a
நடிகர் வைபவ்வுக்குக் காட்சியை விளக்கும் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர். - படம்: தந்த்ரா ஃபிலிம்ஸ்
multi-img1 of 2

ஆன்மிகமும் அதிரடியும் கலந்து பிரம்மாண்டமாக உருவாகும் ‘தத் த்வம் அஸி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மே 26ஆம் தேதி தொடங்கியது. 

தொடக்க நிகழ்ச்சியில் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பொன்ராம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். 

சிங்கப்பூரின் ‘தந்த்ரா ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.கே.சரவணா, ‘தந்த்ரா’ நிறுவனக் குழுமத்தின் தலைமை நிர்வாகி ஜே.கே.சத்தீஸ் குமார் இருவரின் தயாரிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.

இத்திரைப்படம், சுவாமி ஐயப்ப பக்தர் ஒருவரின் வாழ்வையும் உறுதியான இறைபக்தியையும் மையமாகக் கொண்டுள்ளது. அதே நேரம், உணர்வு கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டு, குடும்பத்தினரையும் இளைஞர்களையும் ஒருசேரக் கவரும் வகையில் திரைப்படம் அமையவுள்ளது.

மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற 'மாளிகப்புரம்’ படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார். ஆன்மிகக் கதைகளை உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், ‘தத் த்வம் அஸி’ திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர். 

பிரேம்ஜி அமரன் இசை அமைக்கிறார். யுவன் செல்வா ஒளிப்பதிவையும் பிரவீன் கே.எல். படத்தொகுப்பையும் கவனித்துக்கொள்வர். கலை இயக்குநராக சூர்யா ராஜிவன் பணியாற்றுகிறார். சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன், ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.

மேலும், ‘தந்த்ரா ஃபிலிம்ஸ்’ நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு முக்கியமான திரைப்படம் ‘ஆர்ய கேரள வர்மன்’. அந்தத் திரைப்படமும் வரலாற்று, ஆன்மிகப் பின்னணியில் உருவாகி வருகிறது.

இவ்வாண்டு ஐயப்ப மண்டலக் காலத்தில் ‘தத் த்வம் அஸி’ திரைப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ஐயப்ப பக்தரான ஜே.கே.சரவணா.

குறிப்புச் சொற்கள்