ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது சவால் இருக்க வேண்டும்: காவ்யா

ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது சவால் இருக்க வேண்டும்: காவ்யா

3 mins read
a95b4795-f26e-46e7-a030-563d2812cdbd
காவ்யா அனில். - படம்: காவ்யா இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

அறிமுகப் படத்திலேயே நல்ல பெயர் எடுக்கும் அதிர்ஷ்டம் அனைவருக்கும் வாய்த்துவிடாது. ஆனால், ‘வித் லவ்’ படத்தின் நாயகி காவ்யாவுக்கு அந்த அதிர்ஷ்டம் உள்ளது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படம் இதுவரை ரூ.25 கோடி வசூல் கண்டுள்ளது.

‘அருமையான படம்’ எனப் பல்வேறு தரப்பினரும் பாராட்டியதால் காவ்யாவும் மொத்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சூட்டோடு சூடாக ரஜினியும் படக்குழுவை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்து உரையாடி உற்சாகப்படுத்தியுள்ளார்.

“பல படங்களில் நடித்தவர்களுக்கே திரு ரஜினியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், முதல் படத்திலேயே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததை வாழ்நாள் முழுவதும் மறக்கவே இயலாது. அவரை நேரில் பார்த்தபோது உற்சாகமாக இருந்தது.

“கலகலப்பாகவும் ஊக்கம் அளிக்கும் வகையிலும் பேசினார். அவரது வார்த்தைகளில் பாசமும் அக்கறையும் இருந்தது. அனைவரிடமும் சில தனிப்பட்ட விவரங்களையும் கேட்டறிந்தார். அவருடன் இருந்த ஒவ்வொரு நொடியும் ஆச்சரியத்துடன் கழிந்தது,” என்று இன்னும்கூட அச்சந்திப்பின் தாக்கத்தில் இருந்து விடுபடாதவராகப் பேசுகிறார் காவ்யா.

‘வித் லவ்’ படத்தின் ஒரு காட்சியில், ‘இளையர்களைப் பார்த்ததுமே அவர்களின் நோக்கம் என்ன என்பதைப் பெண்கள் மட்டும் எப்படி கேமரா கண்களைக் கொண்டு கண்டுபிடிக்கிறார்கள்’ என்று ஒரு காட்சி வரும்.

காவ்யாவும் நிஜத்தில் அப்படிப்பட்டவர்தானா என்று கேட்டால், ‘எல்லா பெண்களுமே அப்படித்தான்’ என்று சொல்லிச் சிரிக்கிறார் காவ்யா.

“எல்லாப் பெண்களுமே ஓர் ஆணைப் பார்த்ததுமே எடை போட்டுவிடுவார்கள். இது ஒருவகை மன விளையாட்டு என்று கூறலாம். ஓர் ஆண் அருகில் வரும்போதே கண்கள் மட்டுமல்ல, தன் உடலில் இருக்கும் ஓர் எச்சரிக்கை உணர்வும் அந்த ஆணின் மன ஓட்டத்தைத் துல்லியமாகப் படம் பிடித்துவிடும்.

“மிக அரிதாகவே என்னுடைய இந்தக் கணக்கு தவறாக அமையும். இந்த உள்ளுணர்வுதான் பெண்களின் பலம். ஆண்கள் நடிப்பில் பலவீனமானவர்கள்,” என்று அண்மைய ஊடகப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் காவ்யா.

மற்ற கதாநாயகிகளைப் போல் சினிமாவுக்கும் தனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று இவர் கூறுவதில்லை. திரைக்குப் பின்னே திரையுலகம் தொடர்புள்ள பல வேலைகளில் ஈடுபட்டு இருந்தாராம்.

கலைப்படம், குறும்படம், சிறிய வேடங்கள் என்று பல்வேறு பணிகளைக் கவனித்து வந்துள்ளார். படத்தயாரிப்பு நிர்வாகத்தையும்கூட கவனித்துள்ளார்.

“படப்பிடிப்பின்போது ஏதாவது ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பேன். ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது சவால் இருக்க வேண்டும். அதுதான் எனக்குப் பிடிக்கும்.

“இனி நடிப்பில் அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும் என்பதும் சவால்தான். இதற்காக ‘வித் லவ்’ பட நாயகன் அபிஷனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். மிக அருமையான மனிதர்,” என்று சொல்லும் காவ்யா, ‘வித் லவ்’ படத்தின் மற்றொரு நாயகியான அனஸ்வராவையும் பாராட்டத் தவறவில்லை.

“அவர் மிக இனிமையானவர். ஒரு தோழியைப் போல் பழகக்கூடியவர்,” என்றும் குறிப்பிடுகிறார்.

“அனஸ்வரா என்னைவிட பிரபலமான நடிகை. அவருக்கான காட்சிகள் காலையிலேயே படமாக்கப்பட்டுவிடும். ஆனால் மாலை வரை படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருப்பார்.

“நாங்கள் நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும் ஒளிப்பதிவாளருக்கு அருகில் உள்ள சிறிய திரையில் பார்த்து நன்றாக நடித்திருந்தால் மனதாரப் பாராட்டுவார். இதுபோன்ற கதாநாயகிகள் கிடைப்பது அரிது,” என்று அனுபவசாலியைப் போல் பேசுகிறார் காவ்யா.

குறிப்புச் சொற்கள்