ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் படம் ‘கருப்பு’.
திரிஷா நாயகியாகவும் ‘லப்பர் பந்து’ சுவாசிகா முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
படம் எப்போதோ வெளியீடு காணத் தயாராகிவிட்டது. எனினும், சில காரணங்களால் வெளியீட்டைத் தள்ளிவைத்தனர்.
இப்போது மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் ‘கருப்பு’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிஷாவை வைத்து ‘மாசானி அம்மன்’ என்ற படத்தை இயக்க இருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. சில காரணங்களால் அந்தப் படம் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. பிறகு அதே கதையை சூர்யாவுக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து, ‘கருப்பு’ எனத் தலைப்பு வைத்தனர்.
படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாம்.
இதனிடையே, படத் தயாரிப்பாளருக்கும் ஆர்.ஜே. பாலஜிக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு, படப்பிடிப்பில் பாதிப்பு என்றெல்லாம் பல்வேறு கட்டுக்கதைகள் வலம்வந்தன. இதையடுத்து, பாலாஜி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
“ரசிகர்கள் எந்தச் செய்தியையும் நம்ப வேண்டாம். நீண்ட நாள் காத்திருப்பதால் சூர்யா ரசிகர்களுக்கு என்மீது கோபம் இருக்கும். அந்தக் கோபத்தை நான் மதிக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தப் படம் வெளிவரத் தாமதமானாலும் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக இருக்கும்,” என்று ஒரு காணொளியை வெளியிட்டு உறுதி அளித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
‘கருப்பு’ திரைப்படத்தைத் தாம் பார்த்ததாகவும், ரசிகர்களின் பொறுமை வீண்போகாது என்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
‘கருப்பு’ படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ளன. அண்மையில் வெளியான ‘நாங்க நாலு பேரு’ என்ற பாடல் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இது சிம்பு பாடியுள்ள பாடல் என்பது கூடுதல் சிறப்பு.
அடுத்து, சாய் அபயங்கரும் பாடகர் பால் டப்பாவும் இணைந்து பாடிய பாடலை வெளியிட உள்ளனர்.
இப்படத்தில் பேபி கண்ணன் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆர்.ஜே. பாலாஜி.
கதைப்படி இவர்தான் வில்லனாம். மேலும், நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், அனகா மாயா ரவி, ஸ்வாஸ்விகா, ஷிவதா, ஜார்ஜ் மரியான், தீபா அக்கா, வடிவேல் முருகன், பூபாளன் என மேலும் பலர் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
“கருப்புசாமி நம் தமிழ் மண்ணின் சாமி. எல்லா ஊர் எல்லையிலும் அய்யனார், முனி, கருப்புசாமி என்று காவல் தெய்வங்கள் பிரம்மாண்டமாக உயர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
“ஒரு நல்ல ஆன்மாவோடு சுற்றிப் பின்னப்பட்ட ஒரு வாழ்க்கையைப் பற்றிய படைப்பு இது. திரைக்கதையை எழுதி முடிக்கும்போது கனவாக இருந்தது. அதையே திரைப்படமாக்கிப் பார்த்தபோது மனம் நிறைந்துபோனது.
திரைக்கதையை எழுதும்போது எப்படி ரசித்தேனோ, உணர்ந்தேனோ, உள்வாங்கினேனோ அப்படியே `கருப்பு’ கதாபாத்திரத்தைத் திரையில் கொண்டுவர முயன்றிருக்கிறேன்.
“இது சந்தேகமில்லாமல் சூர்யா படம்தான். ஆனால், எனது பாணியில் தனித்துவமாக இருக்கும். சமுதாயப் பொறுப்புள்ள ஜனரஞ்சகப் படங்களைத் தர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். படங்களில் பெண்களை பிற்போக்குத்தனமாகக் காட்டுவது, தேவையில்லாமல் போதைப்பொருள்களை ஊக்குவிப்பது என்பது ஒருநாளும் கிடையாது. இந்தப் படத்திலும் அந்தக் கொள்கையைக் கடைப்பிடித்துள்ளேன்,” என்கிறார் ஆர்.ஜே. பாலாஜி.
இம்முறை பட வெளியீட்டில் எந்த மாற்றமும் இருக்காது எனப் படக்குழுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பட வெளியீட்டுக்காக சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கிடக்கிறார்கள்.
இம்முறை சூர்யாவும் தனது ரசிகர்களுடன் இணைந்து ‘கருப்பு’ படத்தைத் திரையரங்கில் பார்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

