சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராகக் கோலோச்சிவந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார். அவருக்கு வயது 84.
முதுமையாலும் கடுமையான நுரையீரல் தொற்றாலும் திரு பாரதிராஜா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதிலிருந்து மீண்டுவந்த அவரை மருத்துவர்கள் வீட்டிலேயே ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தி இருந்தனர்.
இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை (ஜூன் 10) காலை அவரது உயிர் பிரிந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகர் பகுதியைச் சேர்ந்த திரு பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி ஆகும். 1977ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ திரைப்படத்தின்மூலம் இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் திரு பாரதிராஜா.
வித்தியாசமான கதைக்களங்கள், காட்சிகளைப் படமாக்கும் பாணி, எதிர்பாராத திரைக்கதைத் திருப்பங்கள் எனத் தமது வித்தியாசமான படைப்புகளின்மூலம் தமிழ்ச் சினிமாவின் புதிய இலக்கணத்தை எழுதினார் திரு பாரதிராஜா.
படப்பிடிப்பு அரங்குக்குள் முடங்கிக்கிடந்த கேமராவைக் கிராமத்து வயல்வெளிகளுக்குக் கொண்டுசேர்த்தவர் என்ற பெருமை இவருக்குண்டு.
இவரது மண்வாசனையுடன் கூடிய படைப்புகளுக்கு இன்றளவும் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.
‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’, ‘கருத்தம்மா’ என இவர் இயக்கிய அத்தனை திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மைல்கற்களாக அமைந்தன. ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற அவரது குரல் ரசிகர்கள் மத்தியில் பெருவரவேற்பைப் பெற்றது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ஏராளமான புதுமுகங்களை இவர் அறிமுகப்படுத்தினார்; தமது உதவி இயக்குநர்களுக்கு எதிர்பாராத வாய்ப்புகளை வழங்கி அவர்களையும் புகழ்பெற வைத்தவர்.
உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜைக் கதாநாயகனாக மாற்றினார். தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் மணிவண்ணன், மனோபாலா ஆகியோர் திரு பாரதிராஜாவின் பட்டறையிலிருந்து உருவானவர்கள்.
இயக்குநர் என்பதைக் கடந்து திரு பாரதிராஜாவுக்குள் சிறந்த நடிகரும் இருந்தார். தமது திரைப்படங்களில் சிறு காட்சிகள் மட்டும் தலைகாட்டியவர், பின்னர் பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்தார்.
இசை அமைப்பாளர்கள் இளையராஜாவும் கங்கை அமரனும் இவரது நெருங்கிய நண்பர்கள். ஒருவரையொருவர் ஒருமையில் அழைத்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிப் பழகிய மூவரும் தமிழ்த் திரையுலகில் இணைந்து செயல்பட்டு, தரமான படங்களை வழங்கியது தமிழ்ச் சினிமாவின் பொற்காலம் என்று சினிமா விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
திரு பாரதிராஜாவைச் சிறப்பிக்கும் விதமாக ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கியது இந்திய அரசு. தேசிய அளவிலும் மாநில அளவிலும் இவர் பல விருதுகளைப் பெற்றார்.
மகன் மனோஜ் பாரதிராஜா திடீரென காலமானதால் பெருஞ்சோகத்தில் மூழ்கிய திரு பாரதிராஜா, கடந்த ஓராண்டாகக் கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
இடையில் சில நாள்கள் மலேசியாவில் வசிக்கும் தம் மகள் வீட்டுக்குச் சென்றும் தங்கியிருந்தார்.
திரு பாரதிராஜாவால் திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்ட நடிகை ராதிகா சில வாரங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
அச்சந்திப்பு குறித்து கருத்துரைத்த திருவாட்டி ராதிகா, மகன் மனோஜின் மறைவு திரு பாரதிராஜாவின் மனத்தை வெகுவாகப் பாதித்தது என்றார்.
அவரது மறைவுச் செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
திரு பாரதிராஜா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய், அவரது இறுதிப்பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

