கடந்து வந்த கடினமான பாதை: ஐஸ்வர்யா ராஜேஷ்

3 mins read
55fbbe6c-dccd-4aab-b8b1-b8c93555f082
ஐஸ்வர்யா ராஜேஷ். - படம்: நியூஸ் ரிசல்யூஷன்

திரையுலகில் நல்ல நடிகை என்று பெயரெடுக்க, தாம் கடந்த காலத்தில் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவரது தாயார் வீடு வீடாகச் சென்று புடவைகள் விற்று, ‘காப்பீட்டு’ முகவராக வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றினாராம்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உடன்பிறந்த சகோதரர்கள் இருவர் இருந்தனர். அவர்கள் இருவரும் இறந்துபோன பிறகு மனமுடைந்து போய்விட்டதாகச் சொல்பவர், பின்னர் தன் தாயார் பட்ட சிரமங்களைக் கண்டு வேதனையுடன் வளர்ந்து ஆளானதாகக் கூறுகிறார்.

“அம்மாதான் வாழ்க்கையில் எனக்கு அனைத்து வகையிலும் முன்மாதிரியாக உள்ளார். எங்களை ஆளாக்க அவர் கொடுத்த உழைப்புக்கு ஈடாக எதையும் தந்துவிட இயலாது. தன்னைப் போல் பிள்ளைகளையும் பொறுப்புள்ளவர்களாக வளர்த்தார்.

“சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு விற்பனைப் பிரதிநிதி முதல், பிறந்தநாள், அலுவலக, ஒன்றுகூடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் வரை, தான் செய்யாத வேலைகளே இல்லை,” என்று கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், சம்பாதித்த முதல் சம்பளம் 225 ரூபாயாம்.

வாயைக்கட்டு, வயிற்றைக்கட்டு என்று மருத்துவரே அறிவுறுத்தினாலும், இப்போது எந்த இடத்தில் பிரியாணி கிடைத்தாலும் உடனடியாக ஒரு பிடி பிடித்துவிடுவேன் என்கிறார்.

திரையுலகில் நடிக்க வந்த புதிதில், ‘நீயெல்லாம் நாயகியாக நடிக்க லாயக்கில்லை, அதற்கான எந்தத் தகுதியும் உன்னிடம் இல்லை’ என்று பலர் ஐஸ்வர்யாவை கேலி செய்தனராம்.

“ஆனால் இவர்களையெல்லாம் கடந்துதான், இன்று நான் நல்ல நடிகையாக பெயர் வாங்கியுள்ளேன். நான் வாய்ப்பு கேட்டபோது ஒரு நகைச்சுவை நடிகருடன் சாதாரண சிறிய வேடத்தில் நடிக்கும்படி கேட்டனர். ஆனால் மறுத்துவிட்டேன். என்னுடைய முதல் படமான ‘அவர்களும் இவர்களும்’ வெளிவந்ததே யாருக்கும் தெரியாது. அடுத்து ‘அட்டகத்தி’ படத்தில் மிகச்சிறிய வேடம். ‘காகா முட்டை’யும், ‘கனா’ படமும்தான் எனது திரை வாழ்க்கையை முடிவு செய்தன.

“ஆலியா பட், கஜோல் ஆகியோருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. திரையுலகில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் தரப்பட வேண்டும் என்பது என் கனவு.

“நான் தமிழில் நன்றாகப் பேசுவேன் என்பதற்காகவே தொடக்கத்தில் எனக்கு வாய்ப்பு தராமல் தவிர்த்தனர். இன்று நான் நடித்த இந்திப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

“அண்மையில் நான் நடித்த தெலுங்குப் படம் 300 கோடி ரூபாய் வசூல்கண்டது. இப்படி பல வெற்றிகளைப் பெறுவது தனி உற்சாகத்தைத் தந்து நம்பிக்கையுடன் நடைபோட வைக்கிறது,” என்று பக்குவமாகப் பேசும் ஐஸ்வர்யா ராஜேஷ், திரையுலகம் தாண்டி தமக்கு நல்ல சில பாடங்களைக் கற்றுத் தந்ததாகவும் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே நான் கற்ற முதல் பாடம். தினமும் காலையில் கண் விழித்ததும் அரை லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான் எனது முதல் வேலை.

“மகிழ்ச்சி என்பது கார், பங்களா, ஆகியவற்றில் இல்லை. நம் மனத்தில்தான் இருக்கிறது என்று ‘காக்கா முட்டை’ படத்தின் படப்பிடிப்பின்போது நான் பார்த்த ஒரு குடிசை வீட்டு அம்மாவிடம் இருந்து தெரிந்துகொண்டேன். இது நான் கற்ற இரண்டாவது பாடம்,” என்று சொல்லும் ஐஸ்வர்யா, இதுவரை தாம் யாரையும் காதலிக்கவில்லை என்கிறார்.

இவருக்குப் பிடித்த படம் ‘அலைபாயுதே’. திரையுலகில் ஆண்ட்ரியாவும் நடிகர் கதிரும்தான் நெருக்கமான நண்பர்களாம். விடுமுறையின்போது ஏதாவது ஐரோப்பிய நாட்டுக்குச் செல்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்.

விஜய் சேதுபதி குறித்து?

“தொடக்க காலத்தில் நானும் அவரும் ஒன்றாக வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறோம். அவர் வளர்ந்த பிறகு என்னுடைய வளர்ச்சிக்கு நிறைய உதவி செய்தார். மற்றபடி, நான் யாருடனும் இதுவரை நெருக்கமான உறவில் இருந்ததில்லை,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

குறிப்புச் சொற்கள்