முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ உடன் மோதும் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’

முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ உடன் மோதும் மகன் ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’

2 mins read
ba79e593-fc03-4cc8-822a-38beefcca3ff
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், விஜய். - படங்கள்: தினமணி
Google News Preferred Icon

தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பில் இருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படமும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்களில் புதிய தகவல் பரவி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கே வெளியாக வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பாராத தணிக்கைச் சான்றிதழ் சிக்கல்கள், நீதிமன்ற வழக்குகள் காரணமாக இதன் வெளியீடு தள்ளிப்போனது.

இதற்கிடையே படம் இணையத்தில் கசிந்த சம்பவமும் படக்குழுவினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தற்போது இப்படத்திற்குச் ‘சென்சார்’ சான்றிதழ் வழங்கத் தணிக்கைக் குழு ஒப்புக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், இழுபறியில் இருந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.

ஒரே நாளில் வெளியாகும் இரு படங்கள்

மறுபுறம், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படமும் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தை லைகா, ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

தற்போது, தணிக்கை சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதால் முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தையும் ஜூலை 31ஆம் தேதியே வெளியீடு செய்யப் படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் உண்மையானால், ஜூலை 31 அன்று ‘பாக்ஸ் ஆபீஸி’ல் தந்தை - மகன் இருவரின் படங்களும் நேருக்கு நேர் மோதும் சுவாரசியமான சூழல் உருவாகும் என்பதால், ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இதுகுறித்து பேரளவில் விவாதித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்