எருமை மீது சவாரி செய்தேன்: மாளவிகா

2 mins read
6c157802-a644-48e4-9bb9-b9c881b1d163
நடிகை மாளவிகா மோகனன். - படம்: ஊடகம்

‘தங்கலான்’ படத்திற்காக எருமை மாட்டின் மீது சவாரி செய்து நடித்துள்ளதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்திருக்கிறார்.

எருமை மீது சவாரி செய்வது குறித்து முன்பே என்னிடம் எதுவும் சொல்லாததால், எருமை சவாரியை நினைத்து மிரண்டுபோய் உட்கார்ந்திருந்தேன். சவாரிக்குப் பிறகு பயமெல்லாம் பறந்து போனது என்கிறார் மாளவிகா.

வெயிலில் படப்பிடிப்பு நடைபெற்றதால் தோலில் பாதிப்புகள் ஏற்பட்டதாகவும் இப்படத்தில் பழங்குடியினரின் தெய்வமாக நடித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழக ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில், பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ பட அனுபவங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்டுள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

“கேஜிஎஃப் எனும் கோலார் தங்க வயல் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வையும் அவர்களின் போராட்டங்களையும் மையப்படுத்தி ‘தங்கலான்’ கதைக்களம் பின்னப்பட்டுள்ளது.

“இதற்காக தங்கக் சுரங்கங்கள் இருந்த பகுதிகளுக்கே நேரடியாகச் சென்று படப்பிடிப்பு நடந்தது.

“தங்கமும் புழுதியும் ரத்தமும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன்.

“கோலார் பகுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்தது. படப்பிடிப்பு முடிவதற்குள் ஐந்து முறை மருத்துவரைப் பார்த்திருப்பேன். கண்களுக்கு, தோலுக்கு எனப் பல முறை மருத்துவரைப் பார்க்கும் சூழல் ஏற்பட்டது.

“கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்புத் தளத்தில் குடையைக்கூட மறந்து வேலை பார்த்தேன். தினமும் 5 மணி நேரம் உட்கார்ந்து ஒப்பனை செய்துகொள்ள வேண்டும். அந்த ஒப்பனையுடன் 10 மணி நேரம் வரை இருக்கவேண்டும். எல்லாவற்றையும் மறந்துதான் படப்பிடிப்புத் தளத்தில் பணியாற்றினோம்.

“எல்லாம் முடிந்து அறைக்குத் திரும்பியபின்னர்தான் எங்கெங்கு காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தோலில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்பது தெரியும்.

“படப்பிடிப்புத் தளத்தில் ஒப்பனை போட்டுக்கொண்டு உட்கார்ந்து இருக்கும்போது எருமை ஒன்று இங்கும் அங்கும் அலைவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்த இயக்குநர் இரஞ்சித், ‘உங்களுக்கு எருமையைப் பிடிக்குமா?’ என்று கேட்டார்.

“ஆமாம், எனக்குப் பிடிக்கும் என்று சொல்லிவிட்டேன். உடனே எருமையின் மீது உட்காரும்படி சொல்லிவிட்டார். விளையாட்டுக்குச் சொல்கிறார் என்று நினைத்தேன்.

“பின்னர், உண்மையிலேயே எருமை மீது உட்கார்ந்து சவாரி செய்தபடி படப்பிடிப்பு நடந்தது. இப்படிப் பல சுவாரசியமான சம்பவங்கள் இப்படத்தில் நடந்திருக்கின்றன. அனைவரும் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறோம்,” என்று பேசியிருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

‘தங்கலான்’ திரைப்படம் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்