தேசிய மரபுடைமை வாரியத்தின் பிரபல வருடாந்தர அரும்பொருளக வட்டமேசை ஹங்பாவ் இயக்கம் மீண்டும் வந்துவிட்டது.
இயக்கத்தின்கீழ் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை சீனப் பஞ்சாங்கத்தின் குதிரை ஆண்டைப் பிரதிபலிக்கும் சிவப்பு உறைகளை அரும்பொருளகங்களிலிருந்து இலவசமாகப் பெறலாம்.
அரும்பொருளகங்கள், மரபுடைமைக் கழகங்கள், கண்காட்சிக் கூடங்கள் என இயக்கத்தில் பங்கேற்கும் 49 அமைப்புகளிலிருந்து ஆறு ஹங்பாவ் உறைகளைப் பெறலாம்.
ஹங்பாவ் உறைகளைத் திறன்பேசிகளிலிருந்தபடியும் சேகரிக்கலாம். திறன்பேசிகளில் அத்தகைய அனுபவத்தைத் தருகிறது ‘ஹங்பாவ் ஹன்ட்’ (Hongbao Hunt) இணைய விளையாட்டு.
அரிய பொருள் குறித்த விடுகதைக்கு விடையைக் கண்டறிந்து அதன் மூலம் அந்தப் பொருள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது விளையாட்டின் ஓர் அம்சம்.
இத்தகைய விளையாட்டுகள் மூலம் மக்கள் பொறுமையாக ஒவ்வோர் அரிய பொருள் பற்றியும் அறிந்துகொள்ள வழிகிடைக்கிறது என்றார் தேசிய மரபுடைமை வாரியத்தின் அனைத்துலக, அரும்பொருளகத் தொடர்புகள் பிரிவின் இயக்குநர் கோ சூர் தோங்.
சிங்கப்பூர் கணித நாட்காட்டியும் மீண்டும் வந்துவிட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நாட்காட்டி ஏழிலிருந்து 8 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கானதாக இருந்தது. தற்போது எட்டிலிருந்து 9 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் நாட்காட்டி மூலம் பயனடையலாம்.
மூத்த கல்வியாளர் யான் காவ் சியோங் என்பவரால் வடிவமைக்கப்பட்ட நாட்காட்டியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கணக்குக் கேள்விகள் இருக்கும்.

