பண்புள்ள சிறுவன் குமார்

பண்புள்ள சிறுவன் குமார்

2 mins read
1ebe97af-7bdc-4761-879e-55952c23db7a
பள்ளிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்கிறான் குமார். - படம்: செயற்கை நுண்ணறிவு
Google News Preferred Icon

குமார் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன். அவன் பள்ளி முடிந்ததும் வீட்டிற்குச் செல்லப் பேருந்தில் ஏறினான். அவனுக்கு பேருந்து ஓட்டுநர் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வது விருப்பம்.

-

அன்றும் அவன் வழக்கம்போல் பேருந்தில் ஏறினான். அதிர்ஷ்டவசமாக அவனுக்குப் பிடித்த இருக்கை கிடைத்தது. குமார் மகிழ்ச்சியாக அமர்ந்து, வெளியே செல்லும் வண்டிகளையும் மரங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டே வந்தான்.

இரண்டு நிறுத்தங்கள் கடந்ததும், பேருந்தில் பலர் ஏறினர். அப்போது, கையில் ஓர் ஊன்றுகோலை ஊன்றியபடி மிகவும் வயதான தாத்தா ஒருவர் பேருந்தில் ஏறினார்.

-

பேருந்து வேகமாகச் சென்றதால், அவரால் சரியாக நிற்க முடியாமல் தள்ளாடினார். பேருந்தில் ஏறிய அனைவரும் வேகமாகச் சென்று இருக்கையில் அமர்ந்து, அவரவர் கைப்பேசியைப் பார்ப்பதிலேயே கவனத்தைச் செலுத்தத் தொடங்கினர்.

-

இதைக் கவனித்த குமார் சிறிதும் தயங்காமல் தன் இருக்கையிலிருந்து எழுந்தான். தாத்தாவின் கையைப் பிடித்து, “தாத்தா, என்னால் நிற்க முடியும். நீங்கள் வந்து என் இடத்தில் உட்காருங்கள்,” என்று அன்பாகக் கூறினான்.

-

அந்தத் தாத்தாவின் முகத்தில் பெரும் நிம்மதி தெரிந்தது. அவர் புன்னகையுடன் குமாரைப் பார்த்து, “மிகவும் நன்றி சிறுவனே! நீ சிறுவனாக இருந்தாலும் உன்னுடைய நல்ல மனத்தைப் பாராட்டுகிறேன்,” என்று மனதார வாழ்த்திவிட்டு அமர்ந்தார்.

-

குமாருக்கு முன் இருக்கை கிடைக்கவில்லை என்றாலும், முன்பு இருந்ததைவிட இப்போது அவனுக்குள் ஒரு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பியிருந்தது.

-

குமார் இறங்கவேண்டிய இடம் வந்தது. குமார் தாத்தாவிடம் சென்று வருவதாகக் கூறி பேருந்தில் இருந்து இறங்கினான். அவன் செய்த அந்த நல்ல செயல் அவன் மனத்தில் நிறைந்திருந்தது. மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் குமார்.

குறிப்புச் சொற்கள்