சித்திரை மாதத்தின் முதல் நாள் நமக்கு தமிழ் வருடப் புத்தாண்டு. இது ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டாடும் அழகான திருவிழா.
வெயில் காலம் தொடங்கி, மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும் வசந்த காலத்தில்தான் நம் புத்தாண்டு பிறக்கிறது. இது நமக்கு புதிய உற்சாகத்தைத் தருகிறது.
60 ஆண்டுகள் கொண்ட ஒரு குடும்பம்
நமக்கு எப்படிப் பெயர்கள் இருக்கிறதோ, அதுபோல தமிழ் வருடங்களுக்கும் பெயர்கள் உண்டு. மொத்தம் 60 பெயர்கள் இருக்கின்றன. இந்தப் பெயர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக வரும்.
சுழன்று வரும் ஆண்டுகள்
ஒரு கடிகார முள் எப்படி 1லிருந்து 12 வரை சென்றுவிட்டு மீண்டும் 1 என்ற ஆரம்பநிலைக்கு வருகிறதோ, அதுபோல 60 ஆண்டுகளும் ஒருமுறை முடிந்துவிட்டால், மீண்டும் முதலாவது ஆண்டிலிருந்து தொடங்கும்.
இனிப்பான கொண்டாட்டம்
அன்று வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, அறுசுவை உணவை உண்டு மகிழ்ச்சியாக இருப்போம்.
குட்டீஸ், இந்த 60 ஆண்டுகளின் பெயர்களும் ‘பிரபவ’என்பதில் தொடங்கி ‘அட்சய’ என்பதில் முடியும். உங்களுடைய பிறந்த ஆண்டு என்ன பெயரில் வருகிறது என உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!
இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் கொண்டாட்டம்
ஏப்ரல் நடுப்பகுதியில் (ஏப்ரல் 13 முதல் 15 வரை) கொண்டாடப்படும் புத்தாண்டு என்பது இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் ஒரு மிக முக்கியமான கலாசார நிகழ்வாகும்.
தமிழ்ப் புத்தாண்டு
தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை 1 அன்று சித்திரைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அறுசுவை உணவு, குறிப்பாக வேப்பம்பூ பச்சடி, கனி காணுதல் போன்றவை முக்கிய அங்கம் வகிக்கும்.
விஷு (கேரளா)
கேரளாவின் முக்கியப் பண்டிகை. அன்றைய தினம் காலையில் எழுந்து முதலில் பணம், நகைகள், கண்ணாடி, பழங்கள், பூக்கள் போன்ற மங்கலப் பொருள்களைப் பார்க்கும் ‘விஷுக்கனி’ முக்கியமானது.
பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பணம் அன்பளிப்பாக வழங்கும் ‘விஷுக்கைநீட்டம்’ என்ற பழைமையான வழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
பொகாலி பிஹு (அசாம்)
இது அசாமியர்களின் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படும் புத்தாண்டு.
ஏழு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், மக்கள் தங்களின் பாரம்பரிய உடையணிந்து இசைக் கருவிகளுடன் ‘பிஹு’ நடனம் ஆடி மிக உற்சாகமாகக் கொண்டாடுவார்கள்.
பைசாகி (பஞ்சாப்)
பஞ்சாபியர்கள், சீக்கியர்களின் மிகப்பெரிய திருவிழா. இது பயிர் அறுவடை முடிந்து விவசாயிகள் மகிழும் காலம்.
ஆண்கள் ஆடும் ‘பாங்க்ரா’ நடனமும், பெண்கள் ஆடும் ‘கித்தா’ நடனமும் இவ்விழாவிற்குப் பெரும் அழகைச் சேர்க்கின்றன.
பொய்லா பைஷாக் (மேற்கு வங்கம்)
வங்காள மக்களின் புத்தாண்டு. மக்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வர்.
அன்றைய தினம் வணிகர்கள் புதிய கணக்குப் புத்தகங்களைத் தொடங்கும் ‘ஹால்காதா’ என்ற சடங்கு மிகவும் பிரபலம்.
இந்த விழாக்கள் அனைத்தும் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழகாக வெளிப்படுத்துகின்றன.

