மாணவர்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

மாணவர்களின் நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்

2 mins read
3c2fb50a-fcff-4094-a666-59658ff7dc6d
தன்வீர் அஹ்மது,10. மார்சிலிங் தொடக்கப்பள்ளி - படம்: பெற்றோர்
multi-img1 of 2
Google News Preferred Icon

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தை இரவில் பிரார்த்தனை செய்வதன் மூலமும், சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு இடைப்பட்ட காலத்தில் உணவு உண்பது, சுவை பானங்கள் அருந்துவது ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலமும் கொண்டாடுகிறார்கள்.

இதில் யூ ஹுவா தொடக்கப்பள்ளியிலிருந்து மாணவர் லபீப் முஹம்மது,9, மற்றும் மார்சிலிங் தொடக்கப்பள்ளியிலிருந்து மாணவர் தன்வீர் அஹ்மது,10, இந்தக் கொண்டாட்டத்தின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

“நான் காலையில் 5 மணிக்கு எழுந்து என் காலை உணவை சாப்பிடுவேன். பள்ளி விடுமுறையில் நான் ஓய்வு எடுத்துக்கொண்டு என் அன்றாட வேலைகளைப் பார்ப்பேன். 7 மணிக்கு குடும்பத்துடன் சேர்ந்து நோன்பு துறப்போம்.” என்று தன்வீரும் லபீப்பும் கூறினார்கள்.

லபீப்புக்கு நோன்பு துறப்பு மிகவும் பிடிக்கும். காரணம், அந்த நேரத்தில்தான் அவர்கள் குடும்பமாக அமர்ந்து ஒருவருக்கொருவர் கலந்துரையாடி மகிழ்ச்சியுடன் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே உணவு உண்பார்கள். அதன் தொடர்பாக தனது அன்பைக் காட்ட இது ஒரு வழி எனக் கருதுகிறார். மேலும் அவர் தனது குடும்பத்துடன் இணைந்திருப்பதாக உணர்கிறார்.

தன்வீருக்கு ரமலான் தொழுகை செய்வது மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். அவர் தான் ஒரு நல்ல இஸ்லாமியர் என்பதில் பெருமிதம் கொள்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு தங்களது கலாசாரம் மற்றும் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை கற்றுக்கொள்கிறார்.

பள்ளியில் சில நேரங்களில் அவர்களுடைய நண்பர்கள் அவர்களைச் சாப்பிட வைக்க முயற்சிப்பார்கள். ஆனால், அனைத்து சவால்களையும் தாண்டி இரண்டு மாணவர்களும் நோன்பைக் கடைப்பிடிக்கிறார்கள்.

“என் அம்மா சமைத்துத்தரும் உணவுக்காக நான் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். சரியான உணவு கிடைக்காதவர்களுக்காக நான் வேதனைப்படுகிறேன்,” என்று இருவரும் கூறினார்கள்.

நோன்பிருப்பது இவ்விரண்டு மாணவர்களுக்கும் வகுப்பறையில் கற்பிக்க முடியாத பல மதிப்புமிக்க பாடங்களைக் கற்பித்துள்ளது.

சவாலாக இருந்தாலும், அவர்கள் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை மனநிறைவுடன் கொண்டாட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். “நான் உணவுக்காகவும் பெரியவர்கள் தரும் பெருநாள் அன்பளிப்புக்காகவும் காத்திருக்கிறேன்,” என்று புன்னகைத்தார்.

நோன்புப் பெருநாள் என்பது பெரியவர்களிடமிருந்து மன்னிப்புக் கேட்கும் ஒரு நாளாகும். அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பிணைப்பை வலுப்படுத்த நல்ல வாய்ப்பாக அமைகிறது.

“நான் என் குடும்பத்துடன் நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட விரும்புகிறேன். பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!”

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்