பாரம்பரியத்தில் திளைத்த மாணவர்கள்

இந்திய மரபுடைமை நிலையத்தில் தொடங்கிய பொங்கல் கொண்டாட்டங்கள்!

பாரம்பரியத்தில் திளைத்த மாணவர்கள்

2 mins read
7feca446-ebda-424b-86f8-d0de8b105cec
தங்களுடைய மட்பாண்டங்களுடன் நந்தனா, 11 (இடது) மற்றும் மித்ரா, 14 - படம்: வித்யா

தமிழர் திருநாளை முன்னிட்டு, இந்திய மரபுடைமை நிலையத்தின் ஏற்பாட்டில், பொங்கல் கொண்டாட்டங்கள் ஜனவரி 10ஆம் தேதியன்று தொடங்கின.

ஐந்தாங்கல், பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும், பொங்கல் தொடர்பான கைவினைப் பொருள்களைச் செய்யும் நடவடிக்கைகளும் மாணவர்களை ஈர்த்தன. 

ஆண்டுதோறும் நிகழும் இவ்விழா, இவ்வாண்டு ஜனவரி 10, 11 மற்றும் 17, 18ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை, எல்லா வயதினரையும் கவரும் வண்ணம் பலதரப்பட்ட நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெரியவர்களுக்கான ஆடை, ஆபரணங்கள் விற்கும் பொங்கல் சந்தையும் நிலையத்தின் இரண்டாவது மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

ஒயிலாட்டம், சக்கையாட்டம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

நிலையத்தின் முதல் மாடியில் பல காட்சிக்கூடங்கள் அமைந்திருப்பதோடு, பாரம்பரிய உடை அணிந்து குடும்பமாகப் புகைப்படம் எடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. 

இக்கொண்டாட்டங்களுக்குச் சிறப்புசேர்க்கும் விதமாக, முதன்முறையாக, மட்பாண்டம் செய்வதை பொதுமக்கள் நேரடியாகக் காணலாம். இதனை இந்தியாவில் வில்லியனூர் எனும் ஊரிலிருந்து வந்துள்ள கிரு‌‌‌ஷ்ணன் முனுசாமி வழிநடத்துகிறார்.

தொடர்புடைய செய்திகள்

ஜனவரி 10, 11 ஆம் தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, முனுசாமி சிறிய மட்பாண்டங்களின் செய்முறையைக் காண்பிப்பார். அவர் செய்த மட்பாண்டங்களைப் பார்வையாளர்கள் வீட்டிற்குக் கொண்டுசெல்லலாம்.

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதன் காரணத்தையும்,  அதன் சாராம்சத்தையும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறும் வகையில் கதைசொல்லும் நடவடிக்கை சனிக்கிழமையன்று நடந்தேறியது. 

தான் செய்த வீடு ஒளிவிளக்கோடு ஜெய்ஶ்ரீமான், 9
தான் செய்த வீடு ஒளிவிளக்கோடு ஜெய்ஶ்ரீமான், 9 - படம்: வித்யா

‘இன்று பகிர்ந்த இரண்டு கதைகளின் மூலம், பொங்கல் பண்டிகையை நாம் சூரியனுக்கும் உழவர்களுக்கும் நன்றி சொல்வதற்காகக் கொண்டாடுகிறோம் என்று கற்றுக்கொண்டேன். கதையின் மூலம், சுயநலமின்றி செயல்பட வேண்டும் என்றும் கற்றுக்கொண்டன்,’ என்று பகிர்ந்தார் ஒன்பது வயது, ஜெய்ஶ்ரீமான். 

இந்திய மரபுடைமை நிலையத்தில் கதைசொல்லும் நடவடிக்கை.
இந்திய மரபுடைமை நிலையத்தில் கதைசொல்லும் நடவடிக்கை. - படம்: வித்யா

“ரித்துஷ்னி,7 முதல் முறையாக இந்திய மரபுடைமை நிலையத்தின் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக வந்திருந்தார். “எனக்கு ஒயிலாட்டம் ஆட ஒரு வாய்ப்புக் கிடைத்தது. எனக்குத் துணியைப் பிடித்துக்கொண்டு, ஒயிலாட்டம் ஆடுவது மிகவும் பிடித்திருந்தது,” என்றார். 

தேஜேஷ்வின், 8, ஆண்டுதோறும் பொங்கல் நடவடிக்கைகளில் கலந்துகொள்ள கட்டாயம் வந்துவிடுவார். இம்முறை, பொங்கல் வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் மட்பாண்டங்களை எவ்வாறு செய்வது என்று முதல் முறையாகக் கற்றுக்கொண்டார். “பொங்கல் மூன்று நாள்கள் தொடரும் என்று கற்றுக்கொண்டேன்: தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல்,” என்றார் தேஜேஷ்வின்.

பதினொரு வயது நந்தனா புள்ளிக் கோலம் போட இங்கு முதன்முறையாகக் கற்றுக்கொண்டார். ஒவ்வோர் ஆண்டும் இந்திய மரபுடைமை நிலையத்தில் நடத்தப்படும் நடவடிக்கைகளில் பங்கேற்பது, கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்துவதாகக் கூறினார். 

சுற்றுப்பயணிகள் மட்டுமல்லாது, சீன, மலாய் இனத்தைச் சேர்ந்தவர்களும் அனைத்து நடவடிக்கைகளிலும் ஆர்வம்காட்டி, பொங்கலைப் பற்றித் தெரிந்துகொண்டது, தம்மை நெகிழவைத்ததாகப் பகிர்ந்தார் 14 வயது மித்ரா. 

குறிப்புச் சொற்கள்