அன்னையின் தூரிகையில் அனன்யாவின் உலகம்

அன்னையின் தூரிகையில் அனன்யாவின் உலகம்

2 mins read
053b0470-930a-42a4-b943-076d6cec2435
தாயார் சுபாஷினியுடன் மகன் அனன்யா. - படம்: சுபாஷினி
Google News Preferred Icon

40 வயது தாயார் சுபாஷினி நாயருக்கு, அனன்யா ஒரே மகள். அவருக்குப் பத்து வயது. ஆசிரியராகப் பணியாற்றும் திருவாட்டி சுபாஷினி, மற்ற நேரங்களில் சிறார் கதைப் புத்தகங்களை எழுதுவதுடன் ஓவியமும் தீட்டுவார்.

அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை (மே 10) அன்னையர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தாய்மை என்பது தினமும் புதிதாகக் கற்றுக்கொள்ளும் ஓர் அழகான பயணம் என்பதைத் திருவாட்டி சுபாஷினி நன்கு புரிந்துவைத்துள்ளார்.

தம் பிள்ளை சிறுவயதிலிருந்தே பல திறன்களைக் கற்று வளர்ந்ததை எண்ணி அவர் பூரிப்படைந்தார்.

தாயின் மனம் எப்போதும் தம் பிள்ளையைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும். ஓய்வெடுக்கும் வேளையில்கூட, பிள்ளைக்குத் தேவையான அனைத்தையும் சரியாகச் செய்தோமா என்ற கவலை தாய்க்கு இருக்கும்.

“எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பது மிகவும் கடினம்; மாறாக, பிள்ளைகளுக்குத் தேவைப்படும் நேரங்களில் நாம் அவர்களுடன் இருப்பதே மிகச் சிறந்தது,” என்கிறார் திருவாட்டி சுபாஷினி.

விலை உயர்ந்த பொருள்களைவிட, நாம் காட்டும் அன்பும் அவர்களோடு இருக்கும் நேரமுமே பிள்ளைகளுக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தரும் என அவர் கூறினார்.

“சில நேரங்களில் கோபப்பட்டால்கூட, ‘என்னை மன்னித்துவிடு’ எனத் தயங்காமல் பிள்ளைகளிடம் கூறுவது இருவருக்குமான அன்பை மேலும் வலுப்படுத்தும்,” என அவர் விளக்கினார்.

“பெரியவர்களை எப்போதும் பிள்ளைகள் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு நாம் வாங்கிக்கொடுத்த பரிசுகளை மறந்துவிடுவர்; ஆனால், நாம் செய்த உதவிகளை அவர்கள் எந்நாளும் நினைவில் வைத்துக்கொள்வர்,” என அவர் நெகிழ்ச்சியோடு சொன்னார்.

தாய்மார்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் சின்னஞ்சிறு செயல்களில்கூட உலகத்தின் மிகப் பெரிய மகிழ்ச்சி ஒளிந்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்